MI Vs RCB, IPL: ஐபிஎல் தொடரில் மும்பை - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவர்களின் முடிவுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.


மும்பை - பெங்களூர் மோதல்:


ஐபிஎல் தொடரில் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணி பேட்ட்ன் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் நிதின் மேனன் , வினீத் குல்கர்ன் மற்றும் விரேந்தர் சர்மா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.


மும்பை அணி அபார வெற்றி:


பெங்களூர் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, ஒற்றை இலக்கில் நடையை கட்டினார். இருப்பினும் கேப்டன் டூப்ளெசி மற்றும் பட்டிதார் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினர். இறுதிக்கட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக், 23 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது.


இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி வீரர்கள், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் 69 ரன்களையும், ரோகித் சர்மா 38 ரன்களையும் சேர்த்தனர். சூர்யகுமர் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மாவும் அதிரடியாக ரன்களை குவிக்க, 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.









நடுவர்கள் மீது ரசிகர்கள் அதிருப்தி:


இந்நிலையில் தான் போட்டியின் நடுவே நடுவர்கள் வழங்கிய பல முடிவுகள் பெங்களூர் ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஒருசார்பாக நடந்துகொள்வதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். அதோடு, போட்டி வர்ணனையாளர்களும் நடுவர்களுக்கு இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ஜெர்சியை அணிவித்து விடலாம் என கிண்டலடித்தனர். அதற்கு காரணமான நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.



  • பெங்களூர் பேட்டிங்கின் போது, ரஜத் பட்டிதார் அடித்த பவுண்டரியை ஆகாஷ் மத்வால் தடுக்க முற்பட்டார். அவரது உடல் பவுண்டரி லைனில் இருந்தபோது, காலில் பந்து பட்டது. இதனை மூன்றாவது நடுவர் பவுண்டரி இல்லை என அறிவித்தார். ஆகாஷ் மத்வால் வீசிய ஓவரில் வந்த ஒரு வைட் பாலையும், கள நடுவர்கள் சரியான பந்து என அறிவித்தனர்

  • பும்ரா வீசிய யார்க்கர் பந்து லோம்ரோரின் காலில் பட்டுச் சென்றது. டிஆர்எஸ் முறையில் ஆய்வு செய்தபோது, இடது ஸ்டெம்பிற்கு வெளியே சென்றது உறுதியானது. ஆனால், களநடுவரின் முடிவு என்ற அடிப்படையில் லோம்ரோர் அவுட் என அறிவிக்கப்பட்டார்.

  • கடைசி ஓவரில் மத்வால் வீசிய பந்து தினேஷ் கார்த்திக்கின் நெஞ்சுப் பகுதிக்கு வந்தது. களநடுவர் நோ பால் தர மறுக்க, டிஅர்எஸ் முறையில் ஆய்வு செய்ய முறையிடப்பட்டது. அப்போது பந்து மேலே சென்றாலும், அது கீழே செல்வதாக காட்டப்படது. இதை கண்டதும் விராட் கோலி கூட அருகிலிருந்த நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.