MI Vs RCB, IPL 2024: மும்பை  மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோதும் போட்டி, வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஹர்திக் பாண்ட்யா தலைமயிலான மும்பை இந்தியன்ஸ்  மற்றும் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோத உள்ளன.


மும்பை - பெங்களூர் மோதல்:


மகராஷ்ட்ரா  மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. மும்பை அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது. ஹாட்ரிக் தோல்விகள தொடர்ந்து கடந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி, அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெல்ல தீவிரம் காட்டுகிறது.  அதேநேரம், பெங்களூர் அணியோ இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில்  மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றது. இதனால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுகிறது.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது மும்பை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், ஹர்திக் பாண்ட்யா, ஷெபர்ட் என அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். பந்துவீச்சில் பும்ரா எதிரணியை திணறைடித்து வருகிறார். ஆனால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஒருங்கிணைந்து செயல்படாததே அந்த அணியின் முதல் 3 போட்டிகளின் தோல்விக்கு காரணமாகும். அந்த தவறை தவிர்த்தால் இன்றைய போட்டியிலும் மும்பை வெல்லலாம்.


பெங்களூர் அணியில் டூப்ளெசி, கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், கோலியை தவிர வேறு யாரும் நடப்பு தொடரில் இதுவரை ரன் குவிக்கவில்லை. தினேஷ் கார்த்திக் இறுதிக் கட்டத்தில் ஓரளவு நம்பிக்கை தருகிறார். பல ஆண்டுகளாக தொடர்வதை போன்று இந்த ஆண்டும், பெங்களூர் அணியின் பவுலிங் லைன் - அப் பலவீனமானதாக உள்ளது. எனவே இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 18 முறையும், பெங்களூர் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூர் அணி அதிகபட்சமாக 235 ரன்களையும், குறைந்தபட்சமாக 122 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 213 ரன்களையும், குறைந்தபட்சமாக 111 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


மைதானம் எப்படி?


வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என வர்ணிக்கப்படுகிறது. இன்றைய போட்டியிலும் அதில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்யவே விரும்பும். காரணம், இரண்டாவது இன்னிங்ஸில் ஏற்படும் பனிப்பொழிவு பேட்டிங்கை மேலும் எளிதாக்கும்.


உத்தேச அணி விவரங்கள்:


மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா , டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெபர்ட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா 


பெங்களூர்: விராட் கோலி, டு பிளெசிஸ், வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சவுரவ் சவுகான், ரீஸ் டாப்லி, கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்