IPL 2025 MI Squad: ஐபிஎல் 2025 சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச பிளேயிங் லெவன் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


ஐபிஎல் 2025 மெகா ஏலம்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம், சவுதி அரேபியாவில் பரபரபாக நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் வலுவான பிளேயிங் லெவனை கட்டமைக்க, போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்தது. அந்த வகையில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஏலத்தில் பங்கேற்று தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. வழக்கமான பாணியில் பெருந்தொகைக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்காமல், இளம் வீரர்கள் மற்றும் காலியிடங்களுக்கு ஏற்ற தகுதிவாய்ந்த வீரர்களை பார்த்து பக்குவமாக ஏலத்தில் எடுத்துள்ளது. அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன்களான நமன் திர் & வில் ஜாக்ஸ் மும்பை அணியின் முக்கிய தேர்வுகளாக அமைந்துள்ளது.



மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:


ஏலத்திற்கு முன்பாகவே மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோரை தக்கவைத்து இருந்தது. இவர்களை தொடர்ந்து, ட்ரெண்ட் போல்ட் (ரூ. 12.50 கோடி), நமன் திர் (ரூ. 5.25 கோடி), ராபின் மின்ஸ் (ரூ. 65 லட்சம்), கரண் ஷர்மா (ரூ. 50 லட்சம்) , ரியான் ரிக்கல்டன் (ரூ. 1 கோடி), தீபக் சாஹர் (ரூ. 9.25) கோடி), அல்லா கசன்ஃபர் (ரூ. 4.80 கோடி), வில் ஜாக்ஸ் (ரூ. 5.25 கோடி), அஷ்வனி குமார் (ரூ. 30 லட்சம்), மிட்செல் சான்ட்னர் (ரூ. 2 கோடி), ரீஸ் டாப்லி (ரூ. 75 லட்சம்), கிருஷ்ணன் ஸ்ரீஜித் (ரூ. 30 லட்சம்), ராஜ் அங்கத் பாவா (ரூ. 30 லட்சம்), சத்தியநாராயண ராஜு (ரூ. 30 லட்சம்), பெவோன் ஜேக்கப்ஸ் (ரூ. 30 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (ரூ. 30 லட்சம்), லிசாட் வில்லியம்ஸ் (ரூ. 75 லட்சம்), விக்னேஷ் புதூர் (ரூ. 30 லட்சம்) ஆகியோரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.


மும்பை அணியின் நிலவரம்: 


பேட்ஸ்மேன்கள்: சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, திலக் வர்மா, பெவோன் ஜேக்கப்ஸ்


விக்கெட் கீப்பர்: ராபின் மின்ஸ், ரியான் ரிக்கல்டன், கிருஷ்ணன் ஸ்ரீஜித்


ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், ராஜ் அங்கத் பாவா, விக்னேஷ் புதூர்


வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, போல்ட், தீபக் சாஹர், அஸ்வனி குமார், ரீஸ் டாப்லி, சத்தியநாராயண ராஜு, அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ்


சுழற்பந்து வீச்சாளர்கள்: கரண் சர்மா, அல்லா கசன்பர்


உத்தேச பிளேயிங் லெவன்:


ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், ரியான் ரிக்கல்டன்/ராபின் மின்ஸ் (வி.கீ), மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர் 


மும்பை அணி எப்படி இருக்கு?


ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு அடுத்தபடியாக மிகவும் வெற்றிகரமான அணியாக மும்பை அணி திகழ்கிறது. பொல்லார்ட், ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோரை உள்ளடக்கி, 9வது விக்கெட் வரையிலும் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டிருந்ததால் கடப்பாரை அணி எனவும் மும்பையை குறிப்பிடப்படுவது உண்டு. அதே பாணியில் தான் மீண்டும் மும்பை அணி பிளேயிங் லெவன கட்டமைக்க முனைப்பு காட்டியுள்ளது. தக்கவைக்கப்பட்ட ரோகித், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் மற்றும் திலக் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்கள் தான். அவர்களுக்கு ஆதரவாக வில் ஜாக்ஸ், நமன் திர், ராபின் மின்ஸ்/ ரிக்கல்டன் ஆகியோர் கூடுதல் பேட்ஸ்மேன்களாக அணியில் இணைந்துள்ளனர். ஆல்-ரவுண்டர் சாண்ட்னர் சிறப்பான பேட்டிங் திறனை கொண்டவராக உள்ளார்.


பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ராவிற்கு ஆதரவாக போல்ட் அணியில் இணைந்து இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. புதிய பந்தில் துல்லியமாக வீசக்கூடிய தீபக் சாஹர் உதவியுடன், பவர்பிளேயில் இந்த மூன்று பேரின் கூட்டணி மும்பை அணிக்கு பெரும் நன்மை பயக்கலாம். அதேநேரம், கரண் சர்மா அளவிற்கு அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வேறு யாரும் அணியில் இல்லாதது, மும்பை அணியின் முக்கிய பலவீனமாக கருதப்படுகிறது.


இதனிடையே, ஹர்திக் பாண்ட்யா, சாண்ட்னர், நமன் திர், வில் ஜாக்ஸ் போன்ற ஆல்-ரவுண்டர்களும் தாக்கத்தை ஏற்படுத்த வீரர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இவர்களின் உதவியால் மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரும் மிக நீண்டதாக உள்ளது.  இதனால், கடந்த 3 ஆண்டுகளாக பெரிது சோபிக்காத மும்பை அணி, அடுத்த சீசனில் திறம்பட செயல்பட்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.


யார் இந்த ராபின் மின்ஸ்?


அன்கேப்ட் விரராக ஜார்கண்டை சேர்ந்த ராபின் மின்ஸ் என்பவரை மும்பை அணி, ஏலத்தில் எடுத்துள்ளது. ஜார்கண்டின் கெயில் எனப்படும் ராபின் கடந்த ஆண்டு குஜராத் அணியில் இணைந்தபோது, ஐபிஎல் வரலாற்றின் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன இந்த 22 வயது இளைஞர், கர்னல் சிகே நாயுடு கோப்பையில் ஹரியானாவுக்கு எதிராக 80 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.