ஐ.பி.எல் 2024:


ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 21) ஆம் தேதி நடைபெற்று வரும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.


அந்தவகையில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளாசிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இதில் பிலிப் சால்ட் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களது ஜோடி 56 ரன்களை சேர்த்தது. அப்போது சால்ட் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 14 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 48 ரன்களை குவித்தார்.


அதேநேரம் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த நரைன் 10 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ரகுவன்ஷியுடன் ஜோடி சேர்ந்தார் வெங்கடேஷ் அய்யர். இதில் யாஷ் தயால் வீசிய பந்தில் 3 ரன்களில் ரகுவன்ஷி விக்கெட்டை பறிகொடுத்தார். அதேநேரம் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக விளையாடினார். அப்போது களத்திற்கு வந்தார் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர். இதில் வெங்கடேஷ் அய்யர் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கேமரூன் கிரீன் பந்தில் விக்கெட்டை இழந்தார்.


பின்னர் வந்த கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் ஷ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணிக்கு வேகமாக ரன்களை சேர்த்துக்கொடுத்தனர். அப்போது ரிங்கு சிங் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 16 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 24 ரன்களை எடுத்தார்.


அடுத்தாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யாருடன் ஜோடி சேர்ந்தார் ரஸல். மறுபுறம் ஷ்ரேயாஷ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். மொத்தம் 36 பந்துகள் களத்தில் நின்று அவர் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 50 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  19 வது ஓவரில் முகமது சிராஜ் பந்தை அடித்து நொறுக்கினார் ரமந்தீப். இவ்வாறாக மொத்தம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு  222 ரன்கள் எடுத்தது.


1 ரன் வித்தியாசத்தில் தோல்வி:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 7 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரி என மொத்தம் 18 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் விராட் கோலி. இதனிடையே ஃபாஃப் டு பிளெசிஸ்  7 ரன்களில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வில் ஜாக்ஸ் மற்றும் ராஜத் பட்டிதர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள்.


இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இதில் வில் ஜாக்ஸ் 32 பந்துகள் களத்தில் நின்று 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 55 ரன்கள் எடுத்தார். அதேபோல், மறுபுறம் ராஜத் பட்டிதர் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 52 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேமரூன் கிரீன் 6 ரன்களிலும்,மஹிபால் லோமரோர் 4 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுக்க சுயாஷ் பிரபுதேசாய் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இதில் பிரபுதேசாய் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 221 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.