ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதும் 53வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இரு அணிகளில் கொல்கத்தா அணி தற்போது 10 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. 


கொல்கத்தா மைதானம் எப்படி..? 


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை மொத்தம் 81 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 34 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 46 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 235 ரன்கள் குவித்துள்ளது. அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதே மைதானத்தில்தான் 49 ரன்களில் சுருண்டது. 


நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இதில், கொல்கத்தா அணி 20 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த ஐந்து போட்டிகளில் பஞ்சாப் அணி மூன்று முறையும், கொல்கத்தா அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 


கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், ஐபிஎல்-ல் இதுவரை கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இடையே மொத்தம் 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த போட்டிகளில், கொல்கத்தா ஏழு முறையும், பஞ்சாப் மற்ற மூன்று போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ரிவர்ஸ் போட்டியில், இந்த சீசனில் கொல்கத்தா அணியை பஞ்சாப் அணி தோற்கடித்தது.


கட்டாய வெற்றி


இரு அணிகளும்  தங்களுக்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழையமுடியும் எனும் நிலையில் உள்ளது. எனவே இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் தங்களது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். கொல்கத்தா அணிக்கு சாதகமான விஷயம் என்னவென்றால் இன்று போட்டி நடப்பது தங்களது சொந்த மைதானம் என்பது மட்டும் தான், மற்றபடி இரு அணிகளும் மிகவும் சரியான பலத்துடன் உள்ளனர். எனவே இந்த போட்டி மட்டுமல்லாது இனி ஐபிஎல் தொடரில் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானதாக கருதப்படும். 


KKR vs PBKS - ஆல்-டைம் டாப் பெர்ஃபார்மர்கள்: 


பேட்டிங்கை பொறுத்தவரை கவுதம் கம்பீர் 492 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பா 438 ரன்களும், விருத்திமான் சாஹா 394 ரன்களும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் சுனில் நரைன் 32 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பியூஷ் சாவ்லா 24 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.