IPL PBKS vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோவில் நடந்த போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணிக்கு தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் பூரண், பதோனி, சமத் அதிரடியால் 171 ரன்களை எட்டியது.
பிரப்சிம்ரன் அசத்தல்:
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முதல் போட்டியில் அசத்திய ப்ரியன்ஷ் ஆர்யாவுடன் பஞ்சாபின் நட்சத்திர வீரர் பிரப்சிம்ரன் களமிறங்கினார். பிரியன்ஷ் ஆர்யா 8 ரன்னில் அவுட்டானாலும் பிரப்சிம்ரன் பவுண்டரி, சிக்ஸராக விளாசினார். அவருக்கு மறுமுனையில் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஒத்துழைப்பு தந்தார்.
இந்த ஜோடியை பிரிக்க ஷர்துல் தாக்கூர், ஆவேஷ்கான், திக்வேஷ் ரதி, பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த் ஆகியோரை கேப்டன் பண்ட் மாறி, மாறி பயன்படுத்தினார். சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் மட்டுமே ஓரளவு நன்றாக வீசினார். மணிமாறன் ஓரளவு நன்றாக வீசினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் அரைசதம் விளாசினார். ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ரன்ரேட்டை தொடர்ந்த பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 110 ரன்களை எட்டியது. 11வது ஓவரின் முதல் பந்தில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த பிரப்சிம்ரன் அவுட்டானார். அவர் 34 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயஸ் - நேகல் வதேரா:
இதன்பின்பு, ஸ்ரேயஸ் ஐயர் இம்பேக்ட் வீரர் நேகல் வதேரா ஜோடி சேர்ந்தனர். இவர்கள் ஆட்டத்தை பஞ்சாப் கட்டுப்பாட்டிலே வைத்திருந்தனர். பிஷ்னோய் வீசிய ஓவரில் நேகல் வதேரா சிக்ஸர், பவுண்டரி விளாச அடுத்த ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்டினார். இதனால், பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்தது.
மிரட்டல் வெற்றி:
கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு வெறும் 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. நேகல் வதேரா ஷர்துல் தாக்கூர் வீசிய 16வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் சிக்ஸர் அடித்தார்.
அதனுடன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசினார். 16.2 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப் அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 52 ரன்களும், நேகல் வதேரா 25 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 43 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி அபார ரன்ரேட்டுடன் உள்ளது. ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கான், பிஷ்னோய் ரன்களை வாரி வழங்கினர்.