ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் எந்த அணி எந்த வீரரை தங்கள் வசப்படுத்த உள்ளது? என்ற கேள்வி எழுந்தது. சென்னை அணி முற்றிலும் இளைஞர் பட்டாளத்துடன் வரும் சீசனில் களமிறங்க உள்ளது.

Continues below advertisement

கான்வே, ரவீந்திராவை கண்டுகொள்ளாத சிஎஸ்கே:

அதேசமயம் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை அணியின் ரச்சின் ரவீந்திரா, கான்வே, பதிரானா உள்ளிட்ட பலரும் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டனர். சென்னை அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித்தந்த ரவீந்திரா, கான்வே இருவரையும் சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக, ரவீந்திராவை ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். 

ஆனால், ரவீந்திரா - கான்வே இருவரையும் சென்னை அணி இந்த ஏலத்தில் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் கண்டுகொள்ளாதது மட்டுமின்றி வேறு எந்த அணிகளும் அவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால், ஏலம்போகாத வீரர்கள் பட்டியலில் இருவரும் சேர்ந்தனர்.

Continues below advertisement

ரவீந்திரா, கான்வே எப்படி?

26 வயதான ரச்சின் ரவீந்திரா 18 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 413 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்துள்ளார். 16 சிக்ஸர்களும், 40 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.  34 வயதான கான்வே ஐபிஎல் போட்டிகளில் 29 போட்டிகளில் ஆடி 1080 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்துள்ளார். 3 முறை ஆட்டமிழக்காமல் ஆடியுள்ளார். 116 பவுண்டரிகள், 34 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 11 அரைசதங்கள் விளாசியுள்ளார். 

என்ன காரணம்?

நியூசிலாந்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சென்னை அணிக்காக முக்கிய பங்காற்றினாலும் கடந்த சீசனில் பெரியளவு ஆடவில்லை. குறிப்பாக, ஆட்டத்தின் நெருக்கடியான சூழலிலும் போதியளவு இவர்கள் ஆடாதது அணிக்கு நெருக்கடியை உண்டாக்கியது. கடந்த சீசனில் சென்னை அணி முற்றிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனால், ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமலே வெளியேறியது. 

மேலும், தொடரின் இரண்டாம் பாதியில் இளம் வீரர்களுக்கு சென்னை அணி வாய்ப்புகளை வழங்கத் தொடங்கியது. அதற்கு நல்ல பலனாக ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், அர்ஜுன் கம்போஜ், ஷேக் ரஷீத் போன்ற இளம் வீரர்கள் களமிறங்கி அசத்தலாக ஆடினார்கள். இதனால், எதிர்கால சென்னை அணியை உருவாக்கும் நோக்கத்தில் சென்னை அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது. 

இளம் வீரர்கள் மீது ஆர்வம்:

இதன் எதிரொலியாகவே அவர்கள் 34 வயதான கான்வேவை அவர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை. மேலும், இந்த ஏலத்தில் இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்த சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி சென்னை அணி நிர்வாகம் ஜடேஜாவின் இடத்திற்கு ஏற்ற ஆல்ரவுண்டரையும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னை அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளராக திகழ்ந்த பதிரானாவை சிஎஸ்கே நிர்வாகம் இந்த முறை அணியில் இருந்து விடுவித்தது. அவரை ஏலத்தில் சென்னை அணி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க லக்னோ - டெல்லி அணிகள் போட்டி போட்டபோதும் சென்னை அணி துளியளவும் ஆர்வம் காட்டவில்லை. 

22 வயதான பதிரானா 32 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் அவர் பந்துவீச்சில் எந்த தாக்கமும் ஏற்படுத்தாத நிலையில், அவரை சென்னை அணி அவரை விடுவித்தது. இந்த நிலையில், அவர் 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.