IPL Auction 2022: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் இதில் கலந்துகொண்டன. அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, ஐந்தாவது முறையாக U19 கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாடி தீர்த்தனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முதல்வர், முன்னாள்/இன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டரில், ‘’ நமது இளம் கிரிக்கெட் வீரர்கள் குறித்து மிகவும் பெருமையாக உள்ளது. ஐசிசி யு 19 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்தப் போட்டி மூலம் அவர்கள் பெரும் துணிவைக் காட்டியுள்ளனர். உயர் மட்டத்தில் அவர்களது அளப்பரிய திறமை, இந்திய கிரிக்கெட்டின் வருங்காலம், பாதுகாப்பான, திறமையான கரங்களிடம் உள்ளது என்பதைக் காட்டுகிறது’’ என்று குறிப்பிட்டார்.
ஐபிஎல் ஏலம்: 2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அணியில் இடம் பிடித்திருந்த கேப்டன் யஷ்துல், ஹர்னூர் சிங், அனீஷ்வர் கவுதம், ராஜ் அங்கத் பாவா, கௌஷல்தம்பே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால் ஆகியோர் நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். ஏலத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
2022 ஐபிஎல் எங்கு நடைபெறும்: 2022 ஐபிஎல் தொடரின் குரூப் போட்டிகள் மும்பையின் வான்கடே மற்றும் பாராபோர்ன் மைதானங்கள் மற்றும் புனேவின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் எம்சிஏ மைதானம் ஆகிய நான்கு இடங்களில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் மைதானங்கள் தொடர்பாக பிசிசிஐ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் யுஏஇயில் நடைபெற்றது. அதன்பின்னர் 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. எனினும் அந்தத் தொடரின் பாதியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. அக்டோபர் மாதம் மீண்டும் ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இம்முறை புதிதாக இரண்டு அணிகள் களமிறங்க உள்ளதால் 2022 ஐபிஎல் தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.