ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்திருக்கும் வீரர்கள் யார், மெகா ஏலத்தில் குறிவைக்கும் வீரர்கள் யார் என்பது பற்றிய முழு விவரம் இதோ!
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜடேஜா - 16 கோடி, தோனி - 12 கோடி, மொயின் அலி - 8 கோடி, ருதுராஜ் - 6 கோடி
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்தது. ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பின் போது சென்னை அணியில் ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கபட்டார். கேப்டன் மகேந்திர சிங் தோனி 12 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி மெண்டராக விளையாடி ஜடேஜா கேப்டனாக இருப்பார் என்று சிலர் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் சிஎஸ்கே அணிக்கு ஜடேஜாவை தற்போது கேப்டனாக்கும் எண்ணம் எதுவுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியில் இடம் பெற வாய்ப்பிருக்கும் வீரர்கள்:
டு ப்ளெஸி, ராபின் உத்தப்பா
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டு ப்ளெஸி, ராபின் உத்தப்பா ஆகியோரை மீண்டும் அணியில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிடலாம். டு ப்ளெஸி, ருதுராஜ் ஓப்பனிங் சிறப்பாக அமைந்துவிட்டதால், இந்த இணையை மீண்டும் களத்தில் இறக்க முயற்சிக்கலாம். டு ப்ளெஸி சிறப்பான ஃபீல்டரும் கூட. இதனால், டு ப்ளெஸி அணியில் எடுக்கப்படலாம்.
அஷ்வின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற 30+ வயது என்றால் டபுள் டிக்! 30 வயதை கடந்த அஷ்வின், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருவார் என்று மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்பின் பவுலிங் ஆப்ஷனில், அஷ்வினை சென்னை அணியில் எடுக்க திட்டம் இருக்கலாம்.
தீபக் சாஹர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சாஹர். சென்னை அணியின் வெற்றிகளில் இவரது பங்கு அதிகம். வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்ய திட்டமிடும் சென்னை அணி, கண்டிப்பாக தீபக் சாஹரை எடுக்கும் முனைப்பில் ஏலத்தில் பங்கேற்கும்.
ஷர்துல் தாகூர்
ஐபிஎல் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது கிரிக்கெட் திறமையால் கவனிக்க வைத்திருப்பவர் ஷர்துல் தாகூர். பேட்டிங், பவுலிங் என ஆல்-ரவுண்டராக அசத்தும் தாகூர் மீண்டும் யெல்லோ ஜெர்ஸியில் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்