CSK Vs RCB: 7 மேட்ச்சா தோல்வி மட்டுமே..! குப்ப பவுலிங் - ருதுராஜை கிழித்து தொங்க விடும் சிஎஸ்கே ரசிகர்கள்..!
IPL 2026 CSK Vs RCB: ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

IPL 2026 CSK Vs RCB: சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் களமிறங்கிய கடைசி 7 போட்டிகளிலும் அணி தோல்வியுற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் இதுவரையிலான சென்னை அணியின் செயல்பாடு ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிகவும் மோசமான பந்துவீச்சால் 250 ரன்களை வாரிக்கொடுத்த ருதுராஜ் தலைமையிலான அணி, சேஸிங்கில் 207 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்-அவுட்டானது. இதனால், 43 ரன்கள் வித்தியாசத்தில் தனது மூன்றாவது போட்டியிலும் சென்னை அணி தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்வி சென்னை அணியின் கேப்டன் மீது ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
7 போட்டிகளிலும் தோல்வி
போட்டி தொடர்பாக பேசுகையில், “நான் எனது பங்களிப்பை வழங்கி இருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்க முடியும். இன்று இது என்னுடைய தவறுதான்” என பேசினார். இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து கேப்டனாக 7 போட்டிகளில் தோல்வியுற்ற நபர் என்ற பட்டியலில், விராட் கோலி மற்றும் யுவராஜ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை ருதுராஜ் பிடித்துள்ளார். 2025ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டது தொடங்கி, நடப்பு தொடரில் ஹாட்ரிக் தோல்வி வரை என கெய்க்வார் தொடர்ந்து 7 தோல்விகளை எதிர்கொண்டுள்ளார். 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஆர்சிபி அணியில் கோலியும், 2013ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணியில் யுவராஜ் சிங்கும் இந்த மோசமான சாதனையை படைத்தனர். தொடர்ந்து அதிகப்படியான போட்டிகளில் தோல்வி கண்ட இந்திய கேப்டன்களின் பட்டியலில் கங்குலி மற்றும் ரோகித் முன்னிலை வகிக்கின்றனர்.
இது தான் பவுலிங் யூனிட்டா?
முதல் இன்னிங்ஸில் சுமார் 15 ஓவர்கள் வரையிலும் போட்டி சென்னை அணியின் கைவசமே இருந்தது. அந்த நேரத்தில் ஆர்சிபி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. ஆனால், கேப்டன் படிதார் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் அடுத்த ஓவர்களில் 99 ரன்களை குவித்து 251 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. ஸ்லோவர் பால்கள், நக்கல் பால்கள், இக்கட்டான நேரத்தில் ரன் ரேட்டை குறைத்து, அழுத்தத்தை பேட்ஸ்மேன்கள் மீது திருப்புவது என எந்தவொரு சவாலையும் சென்னை அணியால் மேற்கொள்ளப்படவில்லை. பந்துவீச்சாளர்களுக்கு அந்த அளவிற்கு அனுபவமும் இல்லை, அவர்களுக்கு வழிநடத்தும் அளவிற்கு திறமையான கேப்டனும் சென்னை அணியில் இல்லை என்றே கூறலாம். மிகவும் குறைந்த பவுண்டரி எல்லைகள் இருப்பதை நன்கு உணர்ந்து கூட பாதி ஆடுகளத்திலேயே குத்தி போடுவது, ஸ்கொயரில் பல சிக்சர்களை விளாசுவதற்கு ஏற்றபடி லெக்சைடில் கால்களை நோக்கி எறிவது, ஆஃப்சைடில் அவுர்-சைட் தி ஆஃப் ஸ்டம்பை நோக்கி வீசுவது என ரன்களை வாரிக் கொடுதனர்.
ருதுராஜை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..
சரியான கலவையில் வீரர்களை தேர்வு செய்து வலுவான ப்ளேயிங் லெவைனையே கட்டமைக்க முடியாமல் சென்னை அணி சொதப்புவதாக ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆல்ரவுண்டர் பிரசாந்த் வீரை தேர்வு செய்துவிட்டு அவருக்கு பந்து வீசவே வாய்ப்பளிக்காதது ஏன்? பேட்ஸ்மேன்கள் அடிக்கிறார்கள் என தெரிந்தும் பவுலிங்கில் உரிய மாற்றத்தை கேப்டன் ருதுராஜ் மேற்கொள்ளாதது ஏன்? என ஏராளமான கேள்விகளை அடுக்கின்றனர். கேப்டனாக இல்லாமல் வீரராக பார்த்தாலும், நடப்பு தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட 30 ரன்களை கூட எட்டவில்லை. ஜடேஜா, பதிரானா, கரன் மற்றும் ரிஸ்வி போன்ற வீரர்களையும் எல்லாம் வெளியேற்றி விட்டு, இப்படி ஒரு மட்டமான அணியை கொடுத்தது அணி நிர்வாகத்தின் தவறா? அல்லது வீரர்களுக்கான பொறுப்புகளை துல்லியமாக நிர்ணயிக்காமல் களத்தில் அவர்களை முறையாக பயன்படுத்தாதது கேப்டனி ருதுராஜின் தவறா என சென்னை அணியின் செயல்பாடு பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்




















