Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
கொல்கத்தா அணிக்காக ரூபாய் 25.20 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி ஃபார்முக்கு திரும்பினார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி - குஜராத் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய செஃபெர்ட் அதிரடியாக ஆடினாலும் அவர் 19 ரன்னில் அவுட்டானார்.
25 கோடி ரூபாய்:
32 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணிக்காக களமிறங்கினார் கேமரூன் கிரீன். இந்த தொடரில் கொல்கத்தா அணி அவரை 25.20 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள கொல்கத்தா அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் களமிறங்கியது.
தனி ஆளாக அசத்திய கேமரூன்:
கொல்கத்தா அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளிலும் கிரீன் பெரியளவு ரன்கள் எடுக்கவில்லை. ஆனால், இன்று மிகுந்த அழுத்தத்திற்கு நடுவில் அபாரமாக ஆடினார். சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, அசோக் சர்மா, ரஷீத் கான் என ஒவ்வொரு பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சையும் விளாசினார்.
அவரது அதிரடியைப் பார்க்கும்போது கொல்கத்தா 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 147 ரன்னில் 5வது விக்கெட்டைப் பறிகொடுத்த கொல்கத்தா அதன்பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தது. மேலும், கிரீனுக்கும் பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கவே இல்லை. கொல்கத்தா அணியை தனி ஆளாக மீட்ட கிரீனின் பேட்டிங்கால் கொல்கத்தா அணி கடைசியில் 20 ஓவர் முடிவில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிரீன் 55 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 79 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார்.
கரைதேறுமா கொல்கத்தா?
ஆல்ரவுண்டரான கிரீன் மீது கொல்கத்தா மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்து எடுத்துள்ளது. இந்த போட்டியிலும் கொல்கத்தா அணி தோல்வியடைந்தால் இது 5வது தோல்வி ஆகும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்கள் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்படும். அப்போதுதான் அவர்களால் ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற சூழல் உண்டாகும்.
தொடருமா அதிரடி?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிக்காக ஆடிய அனுபவம் கொண்டவர். 26 வயதான கிரீன் இதுவரை 35 போட்டிகளில் ஆடி 842 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 100 ரன்கள் விளாசியுள்ளார். இனி வரும் போட்டிகளிலும் கிரீன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக ஆடினால் மட்டுமே கொல்கத்தாவால் வெற்றி பெற முடியும்.
கொல்கத்தா அணியில் டிம் செஃபெர்ட், ரஹானே, கிரீன், பவெல், ரிங்குசிங், சுனில் நரைன் என வலுவான வீரர்கள் இருந்தாலும் அணியாக அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை. இளம்வீரர் ரகுவன்ஷி கடந்த போட்டியில் சிறப்பாக ஆடினாலும் வெற்றியைப் பெற கொல்கத்தாவால் இயலவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்



















