IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத் அணி நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை 23 பந்துகள் மீதம் வைத்து லக்னோ அணி எட்டிப்பிடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஐதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் இன்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு லக்னோ பந்துவீச்சாளர்கள் சவால் அளித்தனர். இருப்பினும் டிராவிஸ் ஹெட், அனிகெத் வர்மாவின் அதிரடியால் 20 ஓவர்களில் 190 ரன்களை ஐதரபாத் விளாசியது.
191 ரன்கள் டார்கெட்:
191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு மார்க்ரம் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். ஆனாலும், அடுத்து வந்த நிகோலஸ் பூரண் மிட்ஷெல் மார்ஷுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினர். குறிப்பாக, நிகோலஸ் பூரண் சிக்ஸர் மழை பொழிந்தார்.
சிக்ஸர் மழை பொழிந்த பூரண்:
அபிஷேக் சர்மா, முகமது ஷமி, சிமர்ஜித் சிங், கம்மின்ஸ் என யார் வீசினாலும் விளாசினார். இதனால், லக்னோ ரன்ரேட் மின்னல் வேகத்தில் ஏறியது. சிக்ஸர் மழை பொழிந்த பூரண் மின்னல் வேகத்தில் அரைசதம் விளாசினார். 8.4 ஓவர்களில் 120 ரன்களை லக்னோ எட்டியபோது பூரண் அவுட்டானார். அவர் 26 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும், அவர் அவுட்டானபோதே ஆட்டத்தை லக்னோ அணிக்கு சாதகமாக கொண்டு வந்திருந்தார்.
அவர் ஆட்டமிழந்த பிறகு மிட்ஷெல் மார்ஷ் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்றினார். அவர் பவுண்டரிகளாக விளாசினார். சிறப்பாக ஆடிய மார்ஷல் 31 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். அடுத்து வந்த பதோனி 2 ரன்னில் அவுட்டாக, ஐதரபாத் அணி ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வர முயற்சித்தது.
கடைசி 36 பந்துகளில் லக்னோ வெற்றிக்கு வெறும் 27 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அப்போது ரிஷப்பண்ட்டை ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்தார். அது நோ பால் என்று சன்ரைசர்ஸ் வீரர்கள் நினைத்த போது, டிவி ரிப்ளேயில் அது அவுட் என்று தெரிந்தது. இதனால், கேப்டன் பண்ட் 15 பந்துகளில் 15 ரன்னுடன் அவுட்டானார்.
சமத்தாக முடித்து வைத்த சமத்:
ஆனால் அடுத்து வந்த அப்துல் சமத் ஹர்ஷல் படேல் ஓவரில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து பதற்றத்தை தணித்தார். கடைசி 30 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்துல் சமத் ஜம்பா வீசிய அந்த 16வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசியதால் அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் கிடைத்தது. இதனால், ரிஷப்பண்ட் தலைமையிலான லக்னோ அணி தங்களது முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது. 23 பந்துகளை மீதம் வைத்து லக்னோ அணி வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 7 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 13 ரன்களுடனும், அப்துல் சமத் 8 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 22 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஆடம் ஜம்பா 4 ஓவர்கள் வீசி 46 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முகமது ஷமி 3 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார். முதல் போட்டியில் மிரட்டலாக வெற்றி பெற்றாலும் அந்த போட்டியிலே அவர்களது பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இன்றைய போட்டியில் அவர்களது பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.