ஐபிஎல் தொடரில் இன்று ஆர்சிபி - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் இன்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கம் அளிக்க, கடைசி கட்டத்தில் துருவ் ஜோரல் 35 ரன்கள் விளாச ஆர்சிபி அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சால்ட் சரவெடி அரைசதம்:

இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு  பில் சால்ட் பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கினார். தொடர்ந்து அவர் அதிரடியாக ஆட மறுமுனையில் விராட் கோலி நிதானமாக ஆடினார். பில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர் என விளாச ஆர்சிபி ரன்ரேட் ஏறியது. இந்த ஜோடி ஓவருக்கு 12 ரன்கள் வீதம் அடித்துக் கொண்டிருந்தது. சிறப்பாக ஆடிய பில் சால்ட் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

இந்த ஜோடி குமார் கார்த்திகேயா ஓவரில் பிரிந்தது. அவரது பந்துவீச்சில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த சால்ட் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர், களமிறங்கிய படிக்கல் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசியது. 

விராட் கோலி அரைசதம்:

தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி அரைசதம் விளாசினார். மறுமுனையில் தேவ்தத் படிக்கல்லும் அதிரடி காட்ட ஆர்சிபியின் வெற்றிக்கு கடைசி 24 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ராஜஸ்தான் அணியில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல்லுக்கு எளிதான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டனர். 

கடைசியில் படிக்கல் பவுண்டரிகளாக விளாச ஆர்சிபி அணி 17.3 ஓவர்களில் 175 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 45 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்களுடனும், படிக்கல் 28 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். 

ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, தீக்ஷனா, ஹசரங்கா, கார்த்திகேயா என யாரது பந்துவீச்சும் பலன் அளிக்கவில்லை. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 6வது இடத்தில் நீடிக்கிறது.