ஐபிஎல் தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டபுள் டமாக்கா போட்டியாக நடக்கிறது. இதில் இந்த வாரம் முதல் ஒவ்வொரு அணியும் தாங்கள் ஏற்கனேவ ஆடும் அணியுடன் மீண்டும் ஆட உள்ளது.
ஆர்சிபி - பஞ்சாப்:
இந்த நிலையில், இன்று மதியம் நடக்கும் போட்டியில் நேற்று முன்தினம் மோதிக்கொண்ட பஞ்சாப் - ஆர்சிபி அணிகள் மீண்டும் மோதுகின்றன.
இந்த தொடரைப் பொறுத்தவரை பலமான அணியாக பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் தற்போது வரை உள்ளன. பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும், ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் மோதிய கடந்த போட்டியில் பஞ்சாப் அணி த்ரில்லர் வெற்றி பெற்றது.
விறுவிறுப்பான மோதல்:
இந்த நிலையில், இன்று சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் பஞ்சாப் - ஆர்சிபி அணிக்கு இடையே மீண்டும் மோதல் நடக்கிறது. ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை சொந்த மைதானத்தில் நடந்த எந்த போட்டியிலும் இந்த தொடரில் வெல்லாவிட்டாலும், எதிரணியின் மைதானத்தில் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். அதேசமயம், சொந்த மைதானம் - வெளி மைதானம் என இரண்டிலும் பஞ்சாப் சிறப்பாக ஆடி வருகிறது.
பேட்டிங் பட்டாளம்:
இதனால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ்சர்மா அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும். தொடர்ந்து சொதப்பி வரும் லிவிங்ஸ்டன் தனது திறமையை காட்ட வேண்டியது அணிக்கு அவசியம் ஆகும். பின்வரிசையில் டிம் டேவிட் தொடர்ந்து நம்பிக்கை அளிக்கிறார். அவரது அதிரடி இன்றும் தொடர வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை இளம் வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் அதிரடி தொடக்கம் தருகின்றனர். இவர்களுடன் ஸ்ரேயாஸ், நேகல் வதேரா பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஸ், ஜான்சென் பின்வரிசையில் அசத்தினால் பஞ்சாப் இமாலய ரன்களை குவிக்கும்.
வெற்றியைத் தீர்மானிக்கும் பவுலிங்:
இந்த போட்டியைப் பொறுத்தவரையில் வெற்றியைத் தீர்மானிப்பது பந்துவீச்சாளர்கள் கையிலே உள்ளது. ஏனென்றால், இந்த மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் என்பதால் சிறப்பாக பந்துவீசுவது யார்? என்பதை பொறுத்தே வெற்றி அமையும்.
ஆர்சிபி அணியில் புவனேஷ்வர், ஹேசில்வுட், யஷ் தயாள் வேகத்திற்கு பக்கபலமாக உள்ளனர். சுழலில் சுயாஷ் சர்மா, லிவிங்ஸ்டன், குருணல் பாண்ட்யா உள்ளனர். ஒரு அணியாக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி ஆர்சிபி வசப்படும்.
அதேபோல, பஞ்சாப் அணி இதே மைதானத்தில் 112 ரன்கள் இலக்கை எட்டவிடாமல் கொல்கத்தாவை சுருட்டியது. அந்த அணியில் அர்ஷ்தீப்சிங், ஜான்சென், ஷேவியர் வேகத்தில் உள்ளனர். சாஹல், மேக்ஸ்வெல் சுழலுக்கு பக்கபலமாக உள்ளனர். இவர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர்கள்.
பழதீர்க்குமா? வெற்றி நடை தொடருமா?
மொத்தத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆர்சிபி பஞ்சாப்பை பழிதீர்க்குமா? பஞ்சாப் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஏறுமுகம் காணுமா? என்பது இன்று மாலை தெரிய வரும். இந்த போட்டி இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த போட்டியை நேரலையில் காணலாம்.