வெறியுடன் களமிறங்கும் ஆர்சிபி.. பண்ட் படையை பந்தாடுமா? காத்திருக்கும் குஜராத்
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் ஒரு இடம் பெங்களூரு அணிக்கு உறுதியாகிவிடும் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் ஒரு இடம் பெங்களூரு அணிக்கு உறுதியாகிவிடும் என்பதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெறியுடன் களமிறங்கும் ஆர்சிபி:
புள்ளிப்பட்டியலில் முதல் இடம் யாருக்கு என்பதை உறுதி செய்யும் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, லக்னோ அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
லக்னோ அணி விவரம்: மிட்செல் மார்ஷ், மேத்தியூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, திக்வேஷ் ரதி, அவேஷ் கான், வில்லியம் ரூர்கே.
பெங்களூரு அணி விவரம்: பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், படிதார், லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நுவான் துஷாரா.
பெங்களூரு அணியின் முழு நேர கேப்டன் பட்டிதார், காயம் காரணமாக இன்றைய போட்டியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்க உள்ளார்.
இதில் லக்னோ அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. அதேநேரம், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூரு அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறலாம். அதன் மூலம், இறுதிப்போட்டிக்கு நுழைய இரண்டு வாய்ப்புகளை பெற முடியும். இதன் காரணமாக இன்றைய லீக் போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 3 முறையும், லக்னோ அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக லக்னோ 213 ரன்களையும், குறைந்தபட்சமாக அதே லக்னோ அணி 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது.




















