IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறிய 3 அணிகளை தவிர்த்து, மற்ற 7 அணிகளுக்கான வாய்ப்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான நான்கு இடங்களுக்கு, 7 அணிகள் தற்போது முட்டி மோதி வருகின்றன.
ஐபிஎல் 2025 - பிளே-ஆஃப்:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரும் வழக்கம்போல் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமின்றி நிகழ்ந்து வருகிறது. 55 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்று நெருங்கியுள்ளது. இதனால் முதல் நான்கு இடங்களை பிடிப்பதற்கான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள், பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகளை இழந்துள்ளன. மீதமுள்ள 7 அணிகளுக்கும் இனி நடைபெற உள்ள ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்னும் 15 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள சூழலில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியின் முன்பும் உள்ள வாய்ப்புகள் என்ன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பிளே-ஆஃப் சுற்று - 7 அணிகளுக்கான வாய்ப்புகள்:
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன் ரேட்டும் 0.482 என வலுவாக உள்ள சூழலில் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே, அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விடும். மழையால் 2 போட்டிகள் கைவிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளின் முடிவில் 5 அணிகள் 18 புள்ளிகளை பெற வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் வெற்றிகளின் எண்ணிக்கையே முதலில் கணக்கில் கொள்ளப்படும் என்பதால், பெங்களூரு அணி மீதமுள்ள மூன்றில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், எந்த சிக்கலும் இன்றி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறக்கூடும். அதேநேரம், இரண்டு போட்டியில் வென்று, 20 புள்ளிகளை எட்டினாலும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. காரணம் தற்போதைய சூழலில் லீக் சுற்றின் முடிவில் 3 அணிகள் 20 புள்ளிகளை எட்டக்கூடிய வாய்ப்புள்ளது.
மீதமுள்ள போட்டிகள்: LSG (A), SRH (H), KKR (H)
2. பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி, 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் ஒரு ட்ரா என, 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரன் ரேட்டும் 0.376 என வலுவாக உள்ள சூழலில் மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வென்றால், 19 புள்ளிகளுடன் அந்த அணி கடைசி நேர நெருக்கடி இல்லாமல் பிளே-ஆஃப் எளிதில் முன்னேறலாம். மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால், முதல் இரண்டு இடங்களை நிச்சயம் உறுதி செய்யலாம். அதேநேரம், மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டு போட்டிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு எதிரானதாகும்.
மீதமுள்ள போட்டிகள்: DC (H), MI (H), RR (A)
3. மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் வென்றது மட்டுமின்றி, அவற்றில் நான்கு போட்டிகள் 50+ ரன்கள் வித்தியாசம் அல்லது 25+ பந்துகள் மீதம் என பெரும் வித்தியாசத்தில் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக 1.274 என்ற அதிகபட்ச ரன் ரேட்டை கொண்டுள்ளது. இரண்டு போட்டிகளில் வென்றாலே கிட்டத்தட்ட பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியானாலும், மூன்றிலும் வெற்றி பெற்றால் அபார ரன் ரேட் காரணமாக முதல் இரண்டு இடங்களை பிடிக்க அதீத வாய்ப்புள்ளது. ஆனால், மீதமுள்ள மூன்று போட்டிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிற்காக தீவிரம் காட்டி வரும் 3 வலுவான அணிகளுக்கு எதிரானதாக உள்ளது. அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது வெற்றி பெற்றால் தான், கடைசி நேர நெருக்கடியில் ரன் ரேட் அடிப்படையிலாவது மும்பை அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், மும்பை அணி ஒட்டுமொத்தமாகவே பலமான அணியாக இருப்பதால், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியுறுவதற்கான வாய்ப்புகளும் குறைவே.
மீதமுள்ள போட்டிகள்: GT (H), PBKS (A), DC (H)
4. குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடியே 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. 0.867 என வலுவான ரன்ரேட்டுடன், மும்பைக்கு அடுத்தபடியாக சிறந்த ரன் ரேட் கொண்ட அணியாக உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய குஜராத்திற்கும் இரண்டு வெற்றிகள் அவசியம். அதேநேரம், முதல் நான்கு இடங்களில் உள்ள அணிகள், அதிக போட்டிகளை (4) இன்னும் கைவசம் கொண்டுள்ள அணியாக குஜராத் திகழ்கிறது. நடப்பு தொடரில் உள்ளுர் நரேந்திர மோடி மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. இந்நிலையில், கடைசி இரண்டு போட்டிகளிலும் உள்ளூரில் விளையாட இருப்பது குஜராத் அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது.
மீதமுள்ள போட்டிகள்: MI (A), DC (A), LSG (H), CSK (H)
5. டெல்லி கேபிடல்ஸ்
நடப்பு தொடரை அட்டகாசமாக தொடங்கிய டெல்லி அணி, தற்போது சற்றே தடுமாறி வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி13 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 0.362 என்ற ரன்ரேட்டை கொண்டுள்ள சூழலில், ஐதராபாத் அணிக்கு எதிராக தோல்வி முனையில் இருந்த டெல்லியை மழை குறுக்கிட்டு காப்பாற்றியது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன், மற்ற போட்டிகளின் முடிவின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறலாம். ஆனால், தற்போதைய சூழலில் 6 அணிகள் 17 அல்லது அதற்கும் மேலான புள்ளிகளை பெற வாய்ப்புள்ளது. கடைசி ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி, மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே யாரையும் சாராமல் நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
மீதமுள்ள போட்டிகள்: PBKS (A), GT (H), MI (A)
6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
நடப்பு சாம்பியனான கொல்கத்தா தொடர் வெற்றிகளை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. அதன்படி, 11 போட்டிகளின் முடிவில் 11 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அணியின் ரன்ரேட் 0.249 ஆக உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற, மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, ரன் ரேட்டை உயர்த்தி 17 புள்ளிகளை பெற வேண்டும். அதன் பிறகும் கூட, மற்ற போட்டிகளின் முடிவிலேயே கொல்கத்தா அணிக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
மீதமுள்ள போட்டிகள்: CSK (H), SRH (A), RCB (A)
7. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
டெல்லியை போன்று தொடர் வெற்றிகளை குவித்து வந்த லக்னோவும் தற்போது தடுமாறி வருகிறது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் அணிகளில் ரன்ரேட்டை நெகட்டிவாக (-0.469) கொண்டிருக்கும் ஒரே லக்னோ மட்டுமே. 11 போட்டிகளில் ஐந்தில் மட்டும் வென்று 10 புள்ளிகளுடன் எழாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 16 புள்ளிகளை எட்டினாலும் மற்ற போட்டிகளின் முடிவே லக்னோவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒன்றில் தோல்வியுற்றாலும் லக்னோ அணியின் பிளே-ஆஃப் கனவு கலைந்துவிடும்.
மீதமுள்ள போட்டிகள்: RCB (H), GT (A), SRH (H)




















