ஐபிஎல் தொடரில் லக்னோ மைதானத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்கும் முன்னர் குஜராத் அணியை லக்னோ அணி எப்படி சமாளிக்கப்போகிறது? என்று கேள்வி எழுந்தது. ஆனால், போட்டியில் அதற்கு நேர் எதிராக அரங்கேறியது.
181 ரன்கள் டார்கெட்:
ஆட்டத்தை தொடங்கிய குஜராத் அணிக்கு சுதர்சன் - சுப்மன்கில் அதிரடியாக ஆடினாலும் கடைசி கட்டத்தில் லக்னோ அணி சிறப்பாக பந்துவீசியதால் 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் ரிஷப்பண்ட் - மார்க்ரம் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கினார்.
மார்க்ரம் - பூரண் காட்டடி:
குறிப்பாக, முகமது சிராஜ் பந்துவீச்சில் மார்க்ரம் பட்டாசாய் வெடித்தார். இதனால், பவர் ப்ளேவில் 10 ரன்கள் வீதம் லக்னோ அணி ஆடியது. கேப்டன் ரிஷப்பண்ட் 18 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, மார்க்ரம் - பூரண் ஜோடி சேர்ந்தது.
இவர்கள் இருவரும் ஆட்டத்தை முழுவதும் லக்னோ பக்கம் கொண்டு வந்தனர். மார்க்ரம் பவுண்டரிகளாக ஒரு பக்கம் விளாச, பூரண் அடித்தால் சிக்ஸ்ர் மட்டுமே அடிப்பேன் என்பது போல சிக்ஸராக விளாசினார். குறிப்பாக, சாய்கிஷோர் வீசிய ஒரே ஓவரில் 24 ரன்களை எடுத்தார்.
அபார அரைசதம்:
அபாரமாக ஆடிய மார்க்ரம் அரைசதம் கடந்தார். அவர் 31 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட்டானார். ஆனாலும் அதற்கு பிறகு பூரண் அதிரடி காட்டியதால் குஜராத் அணிக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
அதிரடி காட்டிய நிகோலஸ் பூரணும் அரைசதம் விளாசினார். 15 ஓவர்களிலே லக்னோ அணி 150 ரன்களை எட்டியது. ஆனாலும், இலக்கை நெருங்கிய நிலையில் நிகோலஸ் பூரண் அவுட்டானார். அவர் 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
கடைசியில் திக் திக் திக்:
எந்தவித சிரமமும் இன்றி இலக்கை நோக்கி லக்னோ அணியை பதோனி - மில்லர் கொண்டு செல்ல முயற்சித்தனர். 9 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மில்லர் வாஷிங்டன் சுந்தர் பந்தில் போல்டானார். இதனால், லக்னோ வெற்றிக்கு 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.
சாய் கிஷோரிடம் குஜராத் கேப்டன் சுப்மன்கில் பந்தை வழங்கினார். முதல் பந்தில் 1 ரன் எடுக்க 2வது பந்தில் பதோனி பவுண்டரி விளாசினார். இதனால், 4 பந்தில் 1 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 3வது பந்தில் பதோனி சிக்ஸர் விளாச 3 பந்துகள் மீதம் வைத்து 19.3 பந்துகளில் 186 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முகமது சிராஜ் 4 ஓவர்களில் 50 ரன்களையும், சாய் கிஷோர் 1.3 ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கினார். இந்த போட்டியின் முடிவால் லக்னோ அணி 6 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா 4வது இடத்திற்கும், ஆர்சிபி 5வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. குஜராத் அணி முதலிடத்தில் இருந்து 2வது இடத்திற்கு சென்றுள்ளது.