நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

KKRக்கு தொடக்கமே காத்திருந்த அதிர்ச்சி:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் 2025 தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சாம்பியன் பட்டமே வெல்லாத பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் அணிகள் சிறப்பாக விளையாடி வருவது தொடரை சுவாரஸ்யம் ஆக்கியுள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி, அதிரடி ஆட்டத்துக்கு பேர் போன ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக குவின்டன் டி கொக் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 1 ரன்கள் எடுத்திருந்தபோது டி கொக் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, சுனில் நரைன், 7 ரன்களுக்கு அவுட்டானார்.

பின்னர், களமிறங்கிய ரகானே, ரகுவன்ஷி ஜோடி சிறப்பாக விளையாடினர். ரகானே, 38 ரன்களுக்கும் ரகுவன்ஷி 50 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இறுதியில், களமிறங்கி அதிரடி காட்டிய வெங்கடேஷ் பவுண்டரி மழை பொழிந்தார். ஒரு முனையில் ரிங்கு சிங் வெளுத்து வாங்கினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது கொல்கத்தா அணி. இதன் மூலம் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்க உள்ள ஹைதராபாத் அணி.

கொல்கத்தா அணி விவரம்:

அஜின்கியா ரகானே, சுனில் நரைன், டி கொக், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரகுவன்ஷி, ரமன்தீப்சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, மொயின் அலி, ஆண்ட்ரூ ரசல்

ஹைதராபாத் அணி விவரம்:

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெத் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி, சிமர்ஜீத் சிங்.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டில் தோல்வியடைந்துள்ளது. சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தாலும், பின்னர் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. 

அதே நேரத்தில், KKR அணியும் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்துள்ளது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, மும்பை அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த தோல்விக்கு இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி பழிவாங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.