மேலும் அறிய
RCB: ஆர்சிபி ரசிகர்களுக்கு பேரிடி.. காயத்தால் சிக்கிய முக்கிய வீரர்கள்! என்ன செய்யப்போகிறது பெங்களூரு?
Royal Challengers Bengaluru: ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டிருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

பில் சால்ட் - ரஜத் படிதார் - ஹேசில்வுட் - படிக்கல் - ஷெப்பர்ட்
Source : twitter
Royal Challengers Bengaluru: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் ஐபிஎல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஆர்சிபியும் முக்கியமான ஒன்றாகும். நடப்பு சீசனைப் பொறுத்தவரை ஆர்சிபி அணியின் செயல்பாடுகள் சிறப்பாகவே அமைந்துள்ளது.
ஆர்சிபிக்கு புது சிக்கல்:
ஆர்சிபி அணி இந்த சீசனில் தனி நபர்களை மட்டும் நம்பியில்லாமல் ஒரு அணியாக சிறப்பாக ஆடி வருகிறது. ஏறத்தாழ ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள ஆர்சிபி அணிக்கு தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் காயத்தாலும், உடல்நலக்குறைவாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வெளியேறிய படிக்கல்:
ஆர்சிபி அணிக்கு நடப்பு சீசனில் ஒன்டவுன் ஆர்டரில் இறங்கி அபாரமாக ஆடி வரும் தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணிக்கு தேர்வாகியுள்ளார். இந்த சீசனில் ஏலம் போகாத மயங்க் அகர்வால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டனுக்கும் காயம்:
ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு பெரும் கவலை அளிக்கும் விதமாக கேப்டன் ரஜத் படிதார் காயத்தில் சிக்கியிருக்கும் தகவல் அமைந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ரஜத் படிதாருக்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த போட்டியில் எஞ்சிய ஓவர்கள் விராட் கோலி கேப்டன்சி செய்தார்.
இதனால், ஆர்சிபி அணி அடுத்து லக்னோ அணிக்கு எதிராக ஆடும் போட்டியில் ரஜத் படிதார் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ப்ளே ஆஃப்-ஐ கருத்தில் கொண்டு ரஜத் படிதார் எஞ்சிய போட்டிகளில் ஆட மாட்டார் என்றே கூறப்படுகிறது.
ஓய்வில் பில் சால்ட் - ஹேசில்வுட்:
ஆர்சிபி அணிக்கு இந்த தொடர் தொடக்கத்தில் இருந்து பக்கபலமாக இருப்பவர் பில் சால்ட். இவர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி தந்தால் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். காய்ச்சல் காரணமாக இவர் கடந்த சில போட்டிகளில் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல் ஆடி வருகிறார். அவரும் சிறப்பான பேட்டிங்கையே வெளிப்படு்த்தி வருகிறார்.
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஹேசில்வுட். ஹேசில்வுட் இந்த தொடரில் பல நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சால் ஆர்சிபி அணிக்கு முதுகெலும்பாக இருந்து ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் திருப்பியுள்ளார். அவருக்கு தோள்பட்டை வலி காரணமாக கடந்த போட்டியில் ஆடவில்லை. அவர் விரைவில் குணம் அடைய வேண்டியது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய தேவை ஆகும்.
ஊருக்கு போகும் ஷெப்பர்ட்:
ஆர்சிபி அணியின் மிகப்பெரிய ஹிட்டராக இருப்பவர் ரோமாரியோ ஷெப்பர்ட். சென்னை அணிக்கு எதிராக தனக்கு பேட் செய்ய கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட ஷெப்பர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். இவரது பேட்டிங்கே அன்றைய போட்டியில் ஆர்சிபியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆடும் ஒருநாள் தொடருக்கான அணியில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால், அவர் ஆர்சிபி அணியின் ப்ளே ஆஃப் போட்டிகளில் ஆட மாட்டார் என்றே கருதப்படுகிறது.
என்ன செய்யப்போகிறது ஆர்சிபி?
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் இந்த காரணங்களால் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. இதனால், எஞ்சிய போட்டிகளில் ஆர்சிபி அணி என்ன செய்யப்போகிறது? என்பது மிகப்பெரிய கேள்வியையும், கவலையையும் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















