RCB VS KKR: குறுக்க வந்த கௌசிக்.. மழை காரணமாக ரத்தான போட்டி.. நாக் அவுட் ஆன கொல்கத்தா
இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவிருந்தன. ஆனால், மழை காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் தொடர் மழை:
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வந்த நிலையில், ஐபிஎல் தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. போர் பதற்றம் தணிந்த நிலையில், இன்று முதல் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கி நடைப்பெறவிருந்தது. ஆனால், மழை காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவிருந்தன. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருந்தது ஆர்சிபி அணி. மறுப்பக்கம் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாக இந்தப் போட்டி இருந்தது.
இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம், புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்திற்கு சென்றுள்ளது. அதே நேரத்தில், ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. கேகேஆர் அணி இதற்கு முன்னர் ஈடன் கார்டன்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே விளையாடிய நிலையில், மழை காரணமாக அந்த போட்டியும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




















