ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிய லீக் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. 

தடுமாறிய கோலி, மிரட்டிய சால்ட்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் சேசிங் உகந்தது என்று தேர்வு செய்தார் ருதுராஜ். இதையடுத்து, பில் சால்ட் - விராட் கோலி ஆட்டத்தை தொடங்கினர். பில் சால்ட் பவுண்டரிகளாக விளாச விராட் கோலி தடுமாறினார். ஆனாலும், மறுமுனையில் பவுண்டரிகளாக விளாசி பில் சால்ட் ஸ்கோரை ஏற்றினார். 

ஆனால், சிறப்பாக ஆடிய பில் சால்டை தோனி தனது அபாரமான ஸ்டம்பிங்கால் அவுட்டாக்கினார். இதனால், 16 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். கோலி நிதானம் காட்ட படிக்கல் அதிரடி காட்டினார். அவர் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச பெங்களூர் அணி ரன்ரேட் எகிறியது. பின்னர், அவரை அஸ்வின் தனது சுழலால் காலி செய்ய படிக்கல் 14 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

பட்டையை கிளப்பிய படிதார்:

அவர் ஆட்டமிழந்த பிறகு முன்னாள் கேப்டன் கோலி- கேப்டன் படிதார் ஜோடி சேர்ந்தனர். படிதார் அளித்த எளிதான கேட்ச் வாய்ப்பை தீபக் ஹுடா கோட்டை விட, கோலி பதிரானா ஓவரில் சிக்ஸர், பவுண்டரி விளாசி அதிரடிக்கு மாறினார். இதனால், 11வது ஓவரில் பெங்களூர் 100 ரன்களை எட்டியது. ஆனால், விராட் கோலியை நூர் அகமது தனது சுழலால் அவுட்டாக்கினார். கோலி 30 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

இதையடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் தடுமாற ரஜத் படிதார் அதிரடிக்கு மாறினார். அவர் ஏதுவான பந்துகளில் சிக்ஸர் விளாசினார். இதனால், 15 ஓவர்களில் 133 ரன்களை பெங்களூர் எட்டியது. கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டிய அவசரத்தில் ஆடிய பெங்களூர் அணிக்கு நூர் அகமது தனது சுழலில் லிவிங்ஸ்டனை போல்டாக்கினார். அவர் 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

படிதார் அரைசதம்:

இதையடுத்து, படிதார் - ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இ்ந்த ஜோடி ரன் அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடினர். தொடர்ந்து அதிரடி காட்டிய ரஜத் படிதார் 30 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதிரடி காட்ட முயற்சித்த ஜிதேஷ் சர்மா 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜடேஜா கேட்ச் பிடித்ததால் அவர் அவுட்டானார். 

சென்னை அணிக்கு எதிராக அதிரடி காட்டிய படிதார் பதிரானா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். அவருக்கு 17, 19 மற்றும் 20 ரன்களில் கேட்ச் விட்ட சென்னை அணி 51 ரன்னில் கேட்ச் பிடித்தது. சாம் கரண் பிடித்த கேட்ச்சால் 32 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 ரன்களுடன் வெளியேறினார் படிதார். ஆனால், படிதார் அவுட்டிற்கு பிறகு க்ருணால் பாண்ட்யா டக் அவுட்டாக பெங்களூர் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பதிரானா 19வது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸ்:

ஆனால், சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளை டாட் பாலாக ஆடிய டிம் டேவிட் அடுத்த 3 பந்துகளை ஹாட்ரிக் சிக்ஸர்களாக விளாசினார். இதனால், ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தனர். இதனால், சென்னை அணிக்கு 197 ரன்களை ஆர்சிபி இலக்காக நிர்ணயித்துள்ளது.

நூர் அகமது சிறப்பாக பந்துவீசி  4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளையும்,  பதிரானா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.