IPL 2025 CSK vs LSG: ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

சென்னை சிறப்பான பவுலிங்:

இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய லக்னோ அணிக்கு  தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.  கலீல் அகமது பந்தில் மார்க்ரம் 6 ரன்னில் அவுட்டாக, லக்னோ அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரண் இந்த போட்டியில் தடுமாறினார். அவர் 8 ரன்களில் அவுட்டாக, மறுமுனையில் மார்ஷ் அதிரடி காட்டினார். அவரை ஜடேஜா தனது சுழலில் போல்டாக்கினார். அவர் 25 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30 ரன்களுடன் வெளியேறினார். 

தடுமாறிய லக்னோ:

73 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், லக்னோ அணிக்காக கேப்டன் ரிஷப்பண்ட் - பதோனி ஜோடி சேர்ந்தனர். கடந்த போட்டிகள் போலவே நூர் அகமது தனது பந்துவீச்சால் லக்னோவிற்கு குடைச்சல் தந்தார். மறுமுனையில் பதிரானா பந்தில் பதோனிக்கு பிடித்த கேட்ச் நோ பால் என் அறிவிக்கப்பட்டதால் பதோனி வாழ்வு பெற்றார். அதேபோல, ஜடேஜா சுழலில் அவுட்டான ரிஷப்பண்ட் 3வது நடுவர் முடிவால் நாட் அவுட்டானார். 

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பதோனி தவறவிட்டார். அவர் 17 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்து ஜடேஜா சுழலில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். பின்னர், அப்துல் சமத் - ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தனர். ஜடேஜா - நூர் அகமது சுழல் தாக்குதல் நடத்த சென்னை அணிக்கு எதிராக லக்னோ ரன்கள் எடுக்கத் தடுமாறியது. 15 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

கடைசியில் அதிரடி:

ரிஷப்பண்ட் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார். நூர் அகமது முழுவதும் லக்னோவை கட்டுப்படுத்தினார்.  அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். பதிரானா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிஷப்பண்ட் 42 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்த தொடரில் அவரது முதல் அரைசதம் இதுவாகும். ரிஷப் பண்ட், அப்துல் சமத்தும் கலீல் அகமது ஓவரில் சிக்ஸர் விளாச லக்னோ அணி 150 ரன்களை கடந்தது. கடைசியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 7 வி்க்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது. ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். கம்போஜ், கலீல் அகமது, தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.