CSK Playoff Scenario: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மும்பையிடம் வீழ்ந்த சென்னை:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சென்னை அணியின் செயல்பாடு உள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி ஐதரபாத் அணியை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இனி நிச்சயம் சிஎஸ்கேவிற்கு ஏறுமுகம் தான் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதனால், சென்னை அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதே சந்தேகமாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். சென்னை தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே நாக்-அவுட்?

சென்னை நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்று, 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது. நடப்பு தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இதுவரை, ராஜஸ்தானை தவிர வேறு எந்தவொரு அணியம் 6 தோல்விகளை பதிவு செய்யவில்லை. அதோடு, முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் ஏற்கனவே 5 வெற்றிகளை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க கடுமையாக போராடி வருகின்றன. இதனால், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவுகிறது. இதனால், சென்னை நடப்பு தொடரில் முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறும் என கூறப்பட்டாலும், தற்போதும் அந்த அணிக்கு சிறுவாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

சென்னை அணிக்கான பிளே-ஆஃப் வாய்ப்புகள் என்ன?

கடந்த சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இருப்பினும், அதற்கு வலுவான ரன் ரேட் தேவைப்பட்டது. லீக் 10 அணிகளாக விரிவடைந்த பிறகு, ஒரு அணி 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்களுக்குள் நுழைந்தது அதுவே முதல் முறை. அதன்படி, மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும். எனவே, அது பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்புள்ளது. அதோடு, ஒவ்வொரு போட்டியிலும் அபார வெற்றி பெற்று, தங்களது ரன்ரேட்டையும் மேம்படுத்த வேண்டும். சென்னை அணி மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலே, மற்ற அணிகளின் பிளே-ஆஃப் சமன்பாடுகள் இயல்பாகவே மாறக்கூடும். இரண்டாவது பாதியில் தொடர் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும். எனவே மற்ற போட்டிகளின் முடிவை கருத்தில் கொள்ளாமல், சென்னை அணி மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதில் 3 போட்டிகள் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தகக்து.

சிஎஸ்கேவின் மீதமுள்ள போட்டிகள்

  • ஏப்ரல் 25 - சிஎஸ்கே Vs ஐதரபாத், சென்னை
  • ஏப்ரல் 30 - சிஎஸ்கே Vs பஞ்சாப், சென்னை
  • மே 3 - சிஎஸ்கே Vs பெங்களூரு, பெங்களூரு
  • மே 7- சிஎஸ்கே Vs கொல்கத்தா, கொல்கத்தா
  • மே 12- சிஎஸ்கே Vs ராஜஸ்தான், சென்னை
  • மே 18- சிஎஸ்கே Vs குஜராத், அகமதாபாத்