ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2024லில் இருந்து காலவரையற்ற ஓய்வை எடுக்க முடிவு செய்துள்ளார்.


இந்த சீசனில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 28 ரன்களுடன் ஒட்டுமொத்தமாக 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மூன்று முறை டக் அவுட்டுடன் நடையைக்கட்டினார். 6 இன்னிங்ஸில் மேக்ஸ்வெல்லின் ஸ்கோர் 0,3,28,0,1,0 ஆக மட்டுமே இருந்துள்ளது. இதன் காரணமாக மேக்ஸ்வெல் இந்த சீசனில் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். நேற்றைய போட்டியில் கூட பெங்களூரு அணியின் பிளேயிங் 11ல் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டார். போட்டிக்கு முன்னதாக மேக்ஸ்வெல், கேப்டன் ஃபாஃப் டுபிளெசிஸிடம் எனக்கு பதிலாக வேறு யாரையாவது முயற்சி செய்யுமாறு கேட்டு கொண்டதாக தெரிவித்தார். 


இதுகுறித்து அவர் பேசுகையில், “ முதல் சில போட்டிகள் தனிப்பட்ட முறையில் எனக்கு சிறப்பாக அமையவில்லை. இதன் காரணமாக நான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் அணியின் பயிற்சியாளரிடம் சென்று, இப்போது எனக்கு பதிலாக வேறு யாரையாவது முயற்சி செய்யும் என்று கூறினேன். நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையில் இருந்திருக்கிறேன். தொடர்ந்து, நீங்கள் இப்படி விளையாடினால், இது உங்கள் வாழ்க்கையை குழிக்குள் தள்ளலாம். உங்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஓய்வு அளிக்க இதுவே சிறந்த நேரம்.


இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை. விரைவில் உடல் மற்றும் நலனில் முன்னேற்றம் கண்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்” என தெரிவித்தார். 


ஆர்சிபி அணியின் மோசமான செயல்பாடு குறித்து பேசிய அவர், “ பவர்பிளேக்கு பிறகு எங்கள் பேட்டிங்கில் சிறிது தடுமாற்றம் இருந்து வருகிறது. இது கடந்த சில சீசன்களில் எனது பலமாக இருந்த பேட்டிங், இந்த சீசனில் சாதகமான முறையில் பங்களிக்க முடியவில்லை என்பதை இப்போது உணர்ந்தேன். இதனால்தான் போட்டியின் முடிவுகளும், அணியின் நிலைமையும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை கொடுத்துள்ளது. வேறொருவருக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்க இது ஒரு நல்ல நேரம் என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் இல்லை என்றால் யாராவது அந்த இடத்தை அவர்களாவது சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.” என தெரிவித்தார். 


கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் இதுவரை எப்படி..? 


இதுவரை இந்த சீசனில் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் 5.33 சராசரியிலும் 94.12 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 32 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக கடந்த 2020ம் ஆண்டிலும், மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். அந்த சீசனில் மேக்ஸ்வெல் 11 இன்னிங்ஸ்களில் 15.42 சராசரி மற்றும் 101.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த வருடம் அவரால் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. மேக்ஸ்வெல் 2015, 2016 மற்றும் 2018ல் மோசமான பார்மிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2018ம் ஆண்டில் மேக்ஸ்வெல் 12 போட்டிகளில் 14.08 சராசரி மற்றும் 140.83 ஸ்ட்ரைக் ரேட்டில் 169 ரன்கள் எடுத்தார். இதேபோல், கடந்த 2016ம் ஆண்டில் அவர் 11 போட்டிகளில் 19.88 சராசரி மற்றும் 144.35 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 2015 இல் 145 ரன்கள் எடுத்தார். சராசரியாக 13.18 மற்றும் 129.46 ஸ்ட்ரைக் ரேட். 


ஒட்டுமொத்த ஐபிஎல் சாதனை:


மேக்ஸ்வெல் இதுவரை 130 ஐபிஎல் போட்டிகளில் 25.24 சராசரியிலும் 156.40 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 2751 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 18 அரைசதங்களும் அடங்கும். 2014 ஆம் ஆண்டு மேக்ஸ்வெல்லுக்கு மிகவும் சிறப்பான சீசன். பின்னர் அவர் 16 போட்டிகளில் 34.50 சராசரியுடன் 187.75 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 552 ரன்கள் எடுத்தார்.


மேலும் படிக்க :


IPL Records : ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த முதல் 7 வீரர்கள்!