நடப்பு ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்தது.
இந்த ஆட்டத்தின்போது பெங்களூரூ அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வழக்கம்போல் தொடக்க வீரராக இருந்து அதிரடியாக ஆடி வந்தார். குறிப்பாக அவர் களத்தில் இருந்து சந்தித்த சில பந்துகளிலேயே அணிக்கு சிறப்பான தொடக்கம் தரவேண்டும் என்பதற்காக அதிரடியாக சிக்ஸர்களை விளாசி வந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா வீசினார்.
தனது விக்கெட்டுக்கு தானே ஸ்கெட்ச்?
அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கும் விளாசினார் விராட் கோலி. இதில் முதல் பந்தினை வீசிய இஷாந்த் சர்மா அதனை ஆஃப்-சைடு ஸ்டெம்புக்கு மேல் செல்வதைப் போல் இன்ஸ்விங் செய்து வீசினார். இந்த பந்தை சரியாக கணித்து பவுண்டரிக்கு தட்டிவிட்டார் விராட் கோலி.
அதன் பின்னர் இஷாந்த் சர்மாவிடம் பேசிய விராட் கோலி, “ நான் தான் ஆஃப்சைடு தட்டி விடுகின்றேன் எனத் தெரிகின்றதுதானே, அங்கு ஒரு ஸ்லிப் வைக்கவேண்டியதுதானே” என்பது போன்ற சைகை காட்டி ஏதோ பேசினார். ஆனால் இஷாந்த் சர்மா தனது ஃபீல்டிங் செட்டப்பில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அடுத்த பந்தை சிக்ஸருக்கு விளாசிய விராட் கோலி, அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை.
இதையடுத்து நான்காவது பந்தினை வைய்டாக வீசிய இஷாந்த் சர்மா, அதற்கு ரீ- பால் வீசும்போது, முதல் பந்தினைப் போல் நல்ல இன் - ஸ்விங்கர் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட விராட் கோலி, அதனை முதல் பந்தினைப் போல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் போரலிடம் தஞ்சம் அடைந்தது.
விராட் கோலியின் விக்கெட்டினை கைப்பற்றிய உற்சாகத்தில் இருந்த இஷாந்த் சர்மா விராட் கோலியிடம் சென்று எதோ சொன்னபடி, சிரித்துக் கொண்டு அவருடன் விளையாட்டாக அவர்மீது சாய்ந்தபடி நடந்து சென்றார். அப்போது விராட் கோலியும் சிரித்தபடி பெவிலியனை நோக்கிச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி 13 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர் விளாசி 27 ரன்கள் எடுத்திருந்தார்.