பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த அணி செல்லும் என்பது இப்போது வரை ஸ்வாரஸ்யமாக இருந்து வருகிறது. நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 166 ரன்கள் என்ற இலக்கை 58 பந்துகளில் விரட்டி அசத்தியது. இதன்மூலம், ஹைதராபாத் அணியில் நிகர ரன் ரேட் டக்கென்று உச்சத்திற்கு சென்றது. அதேபோல், ஐபிஎல் 2024ல் பிளே ஆஃப்களில் இருந்து வெளியேறிய முதல் அணி என்ற மோசமான பெருமையை பெற்றது மும்பை இந்தியன்ஸ். 57 போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிய முதல் அணி மும்பை இந்தியன்ஸ் என்றாலும், எந்த 4 அணிகள் பிளே ஆஃப்க்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். 


வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்: 


மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு வெளியே செல்லும் முதல் அணி என்ற மோசமான பெருமையைப் பெற்றுள்ளது. ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் தனது அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், 12 புள்ளிகளை மட்டுமே பெறும்.


இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் தற்போது 12 புள்ளிகளை பெற்றிருந்தாலும், டெல்லி கேப்பிடல்ஸ் இன்னும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது. இந்த போட்டி ஒருவேளை ரத்து செய்யப்பட்டாலும் இரு அணிகளும் தலா 13 புள்ளிகளை பெறும். 


ஒரு அணி வெற்றி பெற்றால், அந்த அணி 14 புள்ளிகளை பெறும். இந்த சூழலில்தான் மும்பை அணி 13 அல்லது 14 புள்ளிகளை பெறுவது சாத்தியமற்றது என்பதால், ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறியது. 


பிளே ஆஃப்க்கு செல்ல எந்த அணிக்கு வாய்ப்பு:


இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது 5 அணிகள் டாப் 4 அணிகளுக்குள் வர கடுமையாக போட்டியிடும். டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் போன்று 12 புள்ளிகளுடன் உள்ளன. ஆனால் டெல்லி மற்றும் லக்னோவின் நிகர ரன் ரேட் சென்னையை விட குறைவாக உள்ளது. டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு இன்னும் தலா 2 போட்டிகள் எஞ்சியுள்ளதால், டாப்-4க்கு செல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இவை தவிர, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, இதுவரை 4 வெற்றிகளுக்குப் பிறகு மூன்று அணிகளும் தலா எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன. பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க வேண்டுமென்றால், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். தற்போது அனைவரின் பார்வையும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணி போட்டியின் மீதே இருக்கும். இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் குஜராத் கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறிவிடும். அதே சமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிலைமை சற்று தொங்கலாகிவிடும்.