குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 


முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 51 ரன்களும், கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்களும் எடுத்தனர். 


குஜராத் அணி சார்பில் ரஷித் கான் 2 விக்கெட்களும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோஹித் சர்மா தலா 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்த 207 ரன்களை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுத்தார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹார், முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். 


தோனியின் பேட்டிங்காக காத்திருந்த ரசிகர் கூட்டம்: 


19.3 வது ஓவரில் சமீர் ரிஸ்வி 6 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து மோஷித் சர்மா பந்தில் அவுட்டானார். மிச்சம் இருந்த 3 பந்துகளில் தோனி களமிறங்கி ஆடுவார் என்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் காத்திருந்த ரசிகர்கள் காத்திருந்தனர். அப்போது ரசிகர்கள் காத்திருப்பு பொய்யாகும் படி ஜடேஜா களமிறங்கி மீதமுள்ள மூன்று பந்துகளை சந்தித்தார். அந்த நேரத்தில் ஸ்டேடியத்தில் டிஜே ’காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’ என்ற பாடலை போட்டார். இதைக்கேட்ட ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆராவாரம் செய்தனர். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 






தோனியின் வைரல் கேட்ச்:


இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி ஒரு ஆச்சரியமான கேட்சை பிடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எட்டாவது ஓவரை வீச ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் வந்தார். அப்போது, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விஜய் சங்கர் ஸ்டிரைக்கில் இருந்தார். விஜய் சங்கரின் பேட்டில் பட்டதும், பந்து தோனியிடம் இருந்து வெகு தொலைவில் சென்று கொண்டிருந்தது. ஆனால் எம்.எஸ். தோனி டைவிங் மூலம் ஒரு சிறந்த கேட்சை எடுத்தார்.






தற்போது மகேந்திர சிங் தோனியின் கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தவிர, சமூக ஊடக பயனர்கள் தொடர்ந்து பதிவுகள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் வயது என்பது வெறும் எண் என்று எம்.எஸ். தோனியின் கேட்ச் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.