இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிக நீண்ட காலமாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த நீண்ட பயணத்தில் ரோஹித் சர்மா, கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பை, இருமுறை ஆசியக் கோப்பை பட்டங்களை வென்று கொடுத்து பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். மேலும், இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். 


இந்தநிலையில், தற்போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் 500 சிக்சர்களை அடித்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ஐபிஎல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 500 சிக்ஸர்களை அடித்த சாதனையை படைத்தார். 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவின் சிக்சர் மன்னனாக 2006-ம் ஆண்டு துவங்கி, தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.






2006ம் ஆண்டு தொடங்கிய டி20 கிரிக்கெட் வாழ்க்கை: 


2006ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான டி20 போட்டியில் ரோஹித் சர்மா தனது டி20 வாழ்க்கையில் முதல் சிக்சரை அடித்தார். மும்பை அணிக்காக விளையாடும் போது, ​​பரோடாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் சிக்சரை அடித்து, தனது அதிரடி பேட்டிங்கை தொடங்கினார். அன்று தொடங்கிய இந்த டி20 கிரிக்கெட் பயணம் இன்று ஹிட் மேன் ரோஹித் சர்மாவாக வலம் வருகிறது. ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவரது டி20 வாழ்க்கையின் 500வது சிக்சரை அடித்தார். ரோஹித் தனது முதல் சிக்ஸரையும் 500வது சிக்ஸரையும் அடித்தபோது, ​​இரண்டு போட்டிகளிலும் அஜிங்க்யா ரஹானே விளையாடிக்கொண்டிருந்தார் என்பது சுவாரஸ்யமான உண்மை.


ரவீந்திர ஜடேஜாவின் பந்தை எல்லைக் கோட்டைத் தாண்டி பறக்கவிட்டு, இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா. டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, இதுவரை 383 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும், ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அதிக சிக்ஸர்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேன் சோயப் மாலிக் ஆவார். இவர் தற்போது 420 சிக்ஸர்களை அடித்துள்ளார்.


டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்களின் மன்னன் யார்?


ரோஹித் சர்மா தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 500 சிக்ஸர்களை பூர்த்தி செய்திருக்கலாம். ஆனால் உலகளவில் அனைத்து டி20 வடிவங்களையும் சேர்த்து அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில், ரோஹித்துக்கு மேல் 4 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இன்றுவரை, கிரிக்கெட்டின் குறுகிய வடிவிலான டி20 வரலாற்றில் அதிகபட்ச சிக்சர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லின் பெயரில் உள்ளது. இவர் தனது டி20 வாழ்க்கையில் மொத்தமாக 1056 சிக்ஸர்களை அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கெய்ரோன் பொல்லார்ட் (860), ஆண்ட்ரே ரசல் (678), காலின் முன்ரோ (548) ஆகியோர் அடுத்த இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.