கடந்த 2004ம் ஆண்டு தோனியை எப்படி பார்த்து ரசித்தோமோ அதே தோனியை நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பார்த்து ரசித்தோம். மகேந்திர சிங் தோனி வந்தவுடனே முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37* ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி வெற்றி பெற முடியாமல் போனாலும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். 


சென்னை அணி தோல்வி:


இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 191 ரன்களை எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 


தோல்வியை கண்டு துவண்டுபோவார்கள் என்று எண்ணப்பட்ட சென்னை ரசிகர்கள், தோனியின் அதிரடியை கண்டு மெய்சிலிர்த்து போகினர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டை வீழ்த்தினார் கலீல் அகமது. தொடர்ந்து, முகேஷ் குமார் சிறப்பாக பந்துவீசி அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோரின் விக்கெட்டைகளை வீழ்த்தினார். 






அக்சார் படேல் டேரல் மிட்செல்லை 34 ரன்களை வெளியேற்றியபோது, மகேந்திர சிங் தோனி உள்ளே வந்தார். தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதற விட்டார். அப்போது, சென்னை ரசிகர்களின் ஒரே எண்ணம் ‘தல’ முன்னாடியே வந்திருக்க கூடாதா என்று. 


தோனியின் அதிரடியான இன்னிங்ஸ்:


டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 6 விக்கெட்கள் வீழ்ந்த பிறகு, களத்திற்குள் உள்ளே வந்த அவர், சும்மா காட்டு காட்டுன்னு காட்டினார். வந்ததுடன் ஒரு பவுண்டரியுடன் இன்னிங்ஸை தொடங்கிய எம்.எஸ்.தோனி, 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அதிரடியாக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது. அது சாத்தியமற்றது என அனைவரும் அறிவர். என்ரிக் நோர்கியா வீசிய கடைசி ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து 20 ரன்கள் எடுத்தார். அப்போது தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 231 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் போது, ​​அவருடன் மறுமுனையில் இருந்த ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் உதவியுடன் 21* ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 






டெல்லி அணிக்கு எதிராக தோனி இப்படி விளையாடிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.