16வது ஐபிஎல் சீசனில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஹாரி ப்ரூக் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே கொல்கத்தாவின் பந்து வீச்சை விளாசி தள்ளியது.
அந்த அணியில் பந்து வீசிய அனைத்து பவுலர்களும் 25 ரன்களை விட்டுக் கொடுத்தனர். ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களம் கண்ட ஹாரி ப்ரூக் 55 பந்துகளில் சதமடித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். ஹாரி ப்ரூக் அடித்த சதம் தான் நடப்பு சீசனில் பதிவான முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது.
யார் இந்த ஹாரி ப்ரூக்?
24 வயதான ஹாரி ப்ரூக் இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர். வலது கை பேட்ஸ்மேனான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 வயதுக்குட்பட்ட வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.தொடர்ந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கிற்குப் பிறகு U-19 உலகக் கோப்பையில் சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையை ப்ரூக் பெற்றார். இதனையடுத்து ஐசிசி அவரை இங்கிலாந்து அணியின் எதிர்கால நட்சத்திரம் என கௌரவித்தது.
இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ப்ரூக் இடம் பிடித்தார்.தொடர்ந்து அந்த ஆண்டில் ஜனவரி 26 ஆம் தேதி தனது முதல் டி20 போட்டியில் விளையாடினார். தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக முதல்முறையாக களமிறங்கினார்.
ஹாரி ப்ரூக்கை நடப்பு ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் அணி 13.25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இவரது அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை விட 9 மடங்கு அதிக தொகையில் எடுக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ஹாரி ப்ரூக் அறிமுகமானார். அவர் முதல் போட்டியில் 13 ரன்களும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் 3 ரன்னிலும், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
அவரது பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், 4வது போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். இது நடப்பு சீசனில் முதல் சதமாகவும், ப்ரூக்கின் முதல் சதமாகவும் அமைந்துள்ளது.