ஐபிஎல் தொடரில் ரன் ஏதும் எடுக்காமல் அதிகமுறை ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில், ரோகித் சர்மாவின் சாதனையை தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார். அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் இருவரும் 16 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளனர். 


தினேஷ் கார்த்திக் அவுட்:


ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரூ அணி முக்கியமான கட்டத்தில், 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வெறும் இரண்டே பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, ரன் ஏதும் எடுக்காமல் சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


மோசமான சாதனை:


இன்றைய போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மா 16 முறை ஐபிஎல் வரலாற்றில் டக்-அவுட் ஆகியுள்ள நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக்கும் அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளார். ரோகித் சர்மாவை காட்டிலும் அதிகமான போட்டியில் விளையாடி, அதிக முறை டக்-அவுட் ஆகி இந்த பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.


அதிகமுறை டக்-அவுட் ஆன வீரர்கள்:


தினேஷ் கார்த்திக் - 16 முறை


ரோகித் சர்மா - 16 முறை


சுனில் நரைன் - 15 முறை 


மன்தீப் சிங் - 15 முறை


கிளென் மேக்ஸ்வெல் - 14 முறை


தொடரும் சொதப்பல்:


கடந்த சீசனில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த தினேஷ் கார்த்திக், நடப்பு தொடரில் முற்றிலும் சொதப்பி வருகிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாகவே 140 ரன்களை மட்டுமே சொதப்பியுள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோரே 30 தான். இந்த நிலையில் தான், இன்றைய போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பியுள்ளார். அதேநேரம், ஐபிஎல் தொடரில் இதுவரை 240 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 4 ஆயிரத்து 516 ரன்களை குவித்துள்ளார். 20 அரைசதங்கள் விளாசியுள்ளார்.  97 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.


ரோகித் சர்மா:


இதனிடையே, இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த பட்டியலில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 6000 ரன்களை கடந்த வெகு சில வீரர்களில் ஒருவராக இருந்தும், இந்த மோசமான சாதனையில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 239 போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 99 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகப்ட்ச ஸ்கோர் 109 ஆகும். ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக 5 முறை மற்றும் வீரராக ஒருமுறை என, மொத்தம் 6 முறை கோப்பையை வென்ற வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளார்.