சென்னை சூப்பர் கிஙஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் கேப்டனாக 200வது போட்டியில் களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார். 


அதன் படி பேட்டிங்கைத் தொடங்கிய ராஜஸ்தான் அணி தனது இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கியது. முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரியை விளாசியது.  பவர்ப்ளேயின் இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் தொடக்க வீரர் பட்லருடன் இணைந்த படிக்கல் அதிரடி காட்டினார். பவர்ப்ளேவில் பெரும்பாலும் அவரே பந்துகளை எதிர் கொண்டார். அதனால், பவுண்டரிகளை விளாசி வந்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு ரன் மளமளவென அதிகரித்தது. பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 57 ரன்கள் சேர்த்து இருந்தது. 


அதன் பின்னர், தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த படிக்கல், ஜடேஜா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டாக போட்டி உடனடியாக சென்னையின் வசம் சென்றது. அடுத்து களத்திற்கு அஸ்வின் வந்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணியால் அடுத்த ஐந்து ஓவர்களில் பவுண்டரியே அடிக்க முடியவில்லை. அதாவது  8 ஓவரில் இருந்து 13வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 






அதன் பின்னர் இந்த தடுமாற்றத்தினை 14வது ஓவரில் அஸ்வின் பவுண்டரி விளாசி முடித்து வைத்தார். 15 ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட அஸ்வின் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் போட்டி இரு தரப்பிலும் சாதகமாகவே சென்றது. பட்லர் 33 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். ஆனால் அவரும் மொயின் அலி பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். அதன் பின்னர் ஹிட்மயர் இறுதி கட்டத்தில் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி நல்ல ஸ்கோரை எட்டியது. 


இறுதியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பில் பட்லர் 52 ரன்கள், படிக்கல் 38 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் அதிரடி காட்டிய  ஹிட்மயர் 18 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். சென்னை அணி சார்பில் ஜடேஜா, தேஷ் பாண்டே மற்றும் ஆகாஷ் சிங் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.