ஐபிஎல் தொடரில் பெங்களூரு - மும்பை அணிகள் இன்று மோதவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லப்போவது யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை காணலாம்.
நடப்பாண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலகமாக தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 4வது ஆட்டத்தில் பாப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது நடைபெறுகிறது. கடந்த சீசனில் மும்பை அணி கடைசி இடத்தையும், பெங்களூரு அணி 4வது இடத்தையும் பெற்றது.
மைதானம் புள்ளி விபரம்
பெங்களூரு அணியின் உள்ளூர் மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை பெங்களூரு அணி 82 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 42 வெற்றிகளையும் 40 தோல்விகளையும் அந்த அணி பெற்றுள்ளது. அதேசமயம் மும்பை அணி இந்த மைதானத்தில் 13 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வென்றுள்ளது. பல ஆண்டுகளாக இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில் அதிகப்பட்ச ரன்களாக பெங்களூரு அணி 2013ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 263 ரன்கள் குவித்தது. குறைந்த ஸ்கோர் வரிசையில் பெங்களூரு அணி கொல்கத்தா அணிக்கெதிராக 2008 ஆம் ஆண்டு எடுத்த 82 ரன்களே உள்ளது.
முதல் இன்னிங்ஸில் விளையாடும் அணி சராசரியாக 170 ரன்கள் வரை எடுக்கும் என்றும், பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சுதான் ஒத்துழைக்கும் என மைதானத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.
அணியின் உத்தேச வீரர்கள் விவரம்:
பெங்களூரு அணியில் பாப் டூ பிளிசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அஹமது, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளே, முகமது சிராஜ் இடம் பெற வாய்ப்புள்ளது.
மும்பை அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ரமன்தீப் சிங், ஜோப்ரா ஆர்சர், ஹிருத்திக் ஷோக்கீன், சந்தீப் வாரியர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் யார்?
ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் விதியை பெங்களூரு அணி பயன்படுத்தி பலனை பெறும் அளவுக்கு அந்த அணியில் வீரர்கள் இல்லை என கூறப்படுகிறது. ஒருவேளை அந்த அணி முதலில் பேட் செய்தால் கூடுதல் பேட்டிங்கிற்கு சுயாஷ் பிரபுதேசாய் வரலாம். அதேபோல் பந்து வீச்சில் சித்தார்த் கவுல் அல்லது கர்ண் ஷர்மாவை சேர்க்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மும்பை அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக பந்துவீச்சில் குமார் கார்த்திகேயாவையும், பேட்டிங்கில் திலக் வர்மாவையும் அந்த அணி களமிறக்க வாய்ப்புள்ளது.
வரலாறை மாற்றுமா மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் 8 ஆட்டங்களுக்கு பிறகு தான் முதல் வெற்றியை பெற்றது. அந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்துள்ளதால் இந்த சீசனில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த சீசனில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் திரும்பி வந்தாலும் அவரால் அணிக்கு கைக்கொடுக்க முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் மும்பை அணி கடைசி 10 சீசனில் தனது முதல் லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த மோசமான சாதனையை இந்த போட்டியில் மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட பெங்களூரு அணி அதனை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம்.