ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


சென்னை - மும்பை மோதல்:


ஐபிஎல் சீசனின் 12 வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. சென்னை அணி தான் விளையாடிய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி, புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடரவும், மும்பை அணி வெற்றிக்கணக்கை தொடங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதோடு, ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் வென்று வரலாற்றில் இடம்பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன.


அதிரடி காட்டிய மும்பை:


மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்த ஜோடி 10 ரன்களை சேர்த்தது. இதனிடையே, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாஹர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதைதொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் - இஷான் ஜோடி  முதல் விக்கெட்டிற்கு, 38 ரன்களை சேர்த்தது. ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


சுழலில் சுருட்டிய சென்னை:


அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன்  5 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் சேர்த்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சென்னை அணி இருமுனையில் இருந்தும் ஜடேஜா மற்றும் சாண்ட்னரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதை எதிர்கொள்ள முடியாமல் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், கேமரூன் கிரீன் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதோடு, இளம் வீரர் அர்ஷத் கானும்,  2 ரன்களில் நடையை கட்டினார். இதனால், 76 ரன்களை சேர்ப்பதற்குள் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிதானமாக விளையாடி வந்த திலக் வர்மா, 22 ரன்களை சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஸ்டப்ஸ் 10 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களை மட்டுமே எடுத்து நடையை கட்டினார். இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 31 ரன்களை சேர்த்தார். 


சென்னை அணிக்கு ரன்கள் இலக்கு:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சாண்ட்னர் மற்றும் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 158  ரன்கள் எனும் இலக்கை சென்னை அணி எட்டுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.