ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றது.
ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பல எதிர்பாராத திருப்பங்களும் அரங்கேறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் பிற்பாதி ஆட்டங்கள் தான் புள்ளிப்பட்டியலில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடுகின்றது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை
நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.அதே சமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பெற்றுள்ளது.
அதேசமயம் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் இதுவரை மொத்தம் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 15 போட்டிகளிலும், ஹைதராபாத் ஒன்பது போட்டிகளிலும் வென்றுள்ளது. மேலும் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் கொல்கத்தா மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இந்த சீசனில் முதல் பாதியில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் ஹைதராபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு?
ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால் , ராகுல் திரிபாதி , ஹாரி ப்ரூக் , அப்துல் சமத் , எய்டன் மார்க்ரம் (கேப்டன்) , அபிஷேக் சர்மா , ஹெய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்) , உம்ரான் மாலிக் , புவனேஸ்வர் குமார் , மயங்க் மார்கண்டே , அஹீல் ஹூசைன்
கொல்கத்தா அணி: ரிங்கு சிங் , நிதிஷ் ராணா(கேப்டன்) , ஆண்ட்ரூ ரஸல் , சுனில் நரைன் , வெங்கடேஷ் ஐயர் , டேவிட் வைஸ் , ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்) , நாராயண் ஜெகதீசன் , ஷர்துல் தாக்கூர் , வருண் சக்ரவர்த்தி , ஹர்ஷித் ராணா
மைதானம் எப்படி?
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானம் பேட்டிங் செய்வதற்கு ஏற்றது. அதேசமயம் பந்துவீச்சை பொறுத்தவரை முதலில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் மைதானத்தில் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது.