ஐபிஎல் 2023ன் சீசனின் 15வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி கடைசி வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. 


முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 212 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 30 ரன்களுக்குள் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. உள்ளே வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்டொய்னிஸ் மற்றும் பூரான் அதிரடியாக விளையாடி 213 ரன்களை துரத்த உதவி செய்தனர். 19.5 வது ஓவரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி  9 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்திருந்தது, வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி பந்தில் பய்ஸ் அடிப்படையில் ஆவேஷ் கான் ஒரு ரன் எடுத்து லக்னோ அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அப்போது உற்சாகத்தில் ஆவேஷ் கான் ஹெல்மெட்டைக் கழற்றி தரையில் வீசினார். இது சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பியது. 


ஆவேஷ் கான் செய்த இந்த ஆவேச செயலை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் கண்டித்துள்ளது. இதுகுறித்து, ஐபிஎல் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆவேஷ் கானின் இந்த செயலை தவறானது என்றும், நடத்தை விதிகளை மீறியதற்காக லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் ஆவேஷ் கான் கண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. தான் செய்தது தவறு என்றும் ஆவேஷ் கான் மன்னிப்பு கோரினார். 






லக்னோ வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் விஷயத்தில் நிதி அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. இதுபோன்ற சம்பவங்களுக்கு முறையான எச்சரிக்கை போதுமானதாக கருதப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதியின் லெவல்-1 குற்றத்தை 2.2 ஒப்புக்கொண்ட அவேஷ், தண்டனையை ஏற்றுக்கொண்டார். லெவல்-1 நடத்தை விதி மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது.


ஃபாப் டு பிளிசிக்கு அபராதம்:


ராயல் செலஞ்சர்ஸ் கேப்டன் ஃபாஃப் டு பிளிசிஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது ஸ்லோ ஓவர் ரேட் வீசியதாக டுபிளிசிக்கு அபராதம் விதிக்கப்பட்து. இந்த சீசனில் அவர் செய்த முதல் குற்றமாகும். அடுத்து வரும் போட்டிகளிலும் டு பிளிசி, இதே தவறு செய்தால் ஒரு போட்டியில் அவர் விளையாட தடை விதிக்கப்படும். 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லக்னோ அணி 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று  புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. 


போட்டியில் என்ன நடந்தது?


முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த லக்னோ 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை பெற்று கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் லக்னோ 4 போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.


இப்போட்டியில் ஆர்சிபி அணி சார்பாக விராட் கோலி 44 பந்துகளில் 61 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 29 பந்துகளில் 59 ரன்களையும், கேப்டன் ஃபாஃப் டுபிளெஸ்ஸிஸ் 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ரன்களையும் பெற்றனர். அதேநேரம் லக்னோ அணி சார்பாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 30 பந்துகளில் 65 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 62 ரன்களையும் பெற்று லக்னோ அணி வெற்றிபெற உதவினர்.