ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக்குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். இந்த பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
ராஜஸ்தான் படுதோல்வி:
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால், பெங்களூருவின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 10.3 ஓவர்களிலேயே 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராஜஸ்தான் அணியில் ஜோ ரூட் மற்றும் ஹெட்மேயரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர்.
பெங்களூரு அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பார்னெல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை தொடர்ந்து, பிரேஸ்வெல் மற்றும் கர்ண் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட்டான அணிகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மிகக்குறைந்த ஸ்கோர் எடுத்த அணி:
எண் | அணி | ஸ்கோர் | ஓவர்கள் | எதிரணி | வருடம் |
1 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 49 | 9.4 | கொல்கத்தா | 2017 |
2 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 58 | 15.1 | பெங்களூரு | 2009 |
3 | ராஜஸ்தான் ராயல்ஸ் | 59 | 10.3 | பெங்களூரு | 2023 |
4 | டெல்லி டேர்டெவில்ஸ் | 66 | 13.4 | மும்பை | 2017 |
5 | டெல்லி டேர்டெவில்ஸ் | 67 | 17.1 | பஞ்சாப் | 2017 |
தொடரும் பெங்களூருவின் சோதனை:
அதிரடியான ஆட்டத்திற்கு பெயர்போன பெங்களூரு அணி, பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதேநேரம், ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு போட்டியில் மிகக்குறைந்த ரன்களை சேர்த்த அணி என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது.
49 ரன்களுக்கு ஆல்-அவுட்:
கடந்த 2017ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த இலக்கை, அதிரடி ஆட்டக்காரர்கள் அடங்கிய பெங்களூரு அணி எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மளமளவென் விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி வெறும் 9.4 ஓவர்கள் முடிவிலேயே 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, கெயில், டிவில்லியர்ஸ் உள்ளிட்ட மற்ற வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் நடையை கட்டினர். இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அணியால் எடுக்கப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோராக தற்போது வரை தொடர்கிறது. அதேநேரம், ஒரு போட்டியில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையும் பெங்களூருவையே சேரும்.