Karun Nair joins LSG: லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் காலில் ஏற்பட்ட காயத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். 


லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியின் போது கே.எல்.ராகுல் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். இதனால் அவர் பெவிலியனுக்கு உடனடியாக திரும்பினார். மேலும், லக்னோ அணி பேட்டிங் செய்தபோது காலில் வலியுடன் அணியை வெற்றி பெறச்செய்ய மோதினார். ஆனால் அந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியைச் சந்தித்தது. அதன் பின்னர் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரது காலில் உள்ள தசை நார் கிழிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மேற்கொண்டு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அவரை மருத்தவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், கே.எல். ராகுல் மேற்கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


இதனால் அவருக்கு பதிலாக லக்னோ அணி கருண் நாயரை அணியில் அவரின் அடிப்படை விலையான ரூபாய் 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 






இந்திய அணிக்கான டெஸ்ட் போட்டியில் மூன்று சதம் விளாசிய கருண் நாயர் கடந்த 2022ஆம் ஆண்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ”டியர் கிரிக்கெட் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு” என பதிவிட்டார். இந்த பதிவு மிகவும் வைரலானது. தற்போது இவரை லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளதால் கருண் நாயர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும், இதுவரை 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1496 ரன்கள் எடுத்துள்ளார்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகல்:


இதனிடையே கே.எல். ராகுல் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், அடுத்த மாதம் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியாவுடன் தான் இருக்க மாட்டேன். இந்திய அணிக்கு திரும்பி அதற்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் செய்வேன். எப்போது அதுதான் எனது முதன்மையான குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற உள்ள, உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளனர். இந்த நிலையில், கே.எல். ராகுலும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


நடப்பு தொடரில் ராகுல் & லக்னோ:


நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும்  4 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதன் மூலம் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நடப்பு தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல், 274 ரன்களை சேர்த்துள்ளார். அதேநேரம், வழக்கமான அதிரடி ஆட்டமின்றி, அவர் மிகவும் நிதானமாக விளையாடியது விமர்சனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.