ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் கடந்தாண்டைப் போலவே அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தது. பி பிரிவில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருந்தது.
நடப்பு தொடரில் இதுவரை
சென்னை அணி நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேசமயம் கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. இதேபோல் கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் தோற்றது. இதனால் அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு சொல்வது என்ன?
ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்த சீசனில் ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
மைதானத்தின் நிலவரம்
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் சென்னை மைதானம் சென்னை அணிக்கு எப்போதும் ராசியானதாகும். இந்த சீசனில் இதுவரை சென்னை அணி இம்மைதானத்தில் 6 முறை விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. லீக் போட்டியில் இந்த ஆட்டம் சென்னை அணிக்கு கடைசி என்பதால் இதில் வெற்றிப் பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.