ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் எய்டன் மார்க்ரம் பங்கேற்க மாட்டார் என தெரியவந்துள்ளது. எனவே இவருக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ESPNCricinfo வெளியிட்ட அறிக்கையில், “நெதர்லாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக மார்க்ரம் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். ஏப்ரல் 3ம் தேதிக்கு பிறகு ஹைதராபாத் அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு கடைசியில் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு தென்னாப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெறுவதற்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானது. நெதர்லாந்திற்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் (ஓவர்-ரேட் பெனால்டிகள் இல்லாமல்) வெற்றி பெற வேண்டும். அதேபோல், மே மாதம் நடைபெறும் நடைபெறும் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் அயர்லாந்து அணி ஒரு போட்டியிலாவது தோற்றால்தான் தென்னாப்பிரிக்கா அணி தகுதிபெறும். ” என தெரிவித்தது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டத்தில் மார்க்ரம் மிஸ் செய்தால், புவனேஷ்வர் குமார் தலைமை தாங்குவார். இருப்பினும், இது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
புவனேஷ்வர் குமார் கடந்த 2013ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரில் களமிறங்கியது முதலே அங்கமாக இருந்து வருகிறார். இதுவரை ஹைதராபாத் அணிக்காக கடந்த 2019 ம் ஆண்டு ஆறு முறையும், 2022 ம் ஆண்டு ஒரு முறையும் தலைமை தாங்கியுள்ளார். ஏழு முறை இவரது தலைமையில் 7 முறை களமிறங்கிய ஹைதராபாத் அணி, இரண்டு முறை மட்டுமே வென்றது.
கேப்டன் மார்க்ரம் தவிர்த்து, நெதர்லாந்துக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் தொடரில் மார்கோ ஜான்சன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் விளையாடி வருகின்றனர். இவர்களும், ஹைதராபாத் அணியின் முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஹாரி புரூக், க்ளென் பிலிப்ஸ், அடில் ரஷீத், ஃபசல்ஹாக் ஃபரூக்கி மற்றும் அகேல் ஹொசைன் ஆகிய ஐந்து வெளிநாட்டு வீரர்களை மட்டுமே கொண்டுள்ளது. இவர்களில் யாரேனும் 4 பேரை மட்டுமே அணியில் எடுக்கமுடியும்.
எய்டன் மார்க்ரம்:
கடந்த ஐபிஎல் சீசனில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி எட்டாம் இடம் பிடித்தது. அதன் பிறகு இந்தாண்டு, எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மார்க்ரம் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் புதிய T20I கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக SA20 லீல் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்று கொடுத்தார்.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிராக ஏப்ரல் 7 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது.
ஹைதராபாத் அணி முழு விவரம்:
அப்துல் சமத், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் மார்கன், அட்ரன் மார்கேன் , விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர சிங் யாதவ், மயங்க் டாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அகேல் ஹொசைன், அன்மோல்ப்ரீத் சிங்