மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து பட்லரின் அதிரடி அரைசதம், ஹெட்மயரின் அதிரடியால் 169 ரன்களை குவித்தது. இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் கேப்டன் டுப்ளிசிசும், அனுஷ் ராவத்தும் ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரில் ரன் எடுக்க தடுமாறினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் அடித்து ஆடினர். பவர்ப்ளே முடிவில் பெங்களூர் அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்துள்ளது.




பெங்களூர் அணிக்காக அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் டுப்ளிசிஸ் 20 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் ராவத் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூர் ரசிகர்கள் விராட்கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.


ஆனால், சாஹல் வீசிய 9வது ஓவரில் வில்லி அடித்த பந்திற்கு ரன் ஓட முயன்ற விராட்கோலி திரும்ப கிரிசீற்கே வந்தபோது சாஹலால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த பந்திலே டேவிட் வில்லி போல்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால், 10 ஓவர்களில் 68 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பெங்களூர் இழந்தது. அடுத்து களமிறங்கிய ஷாபாஸ் அதிரடியாக ஆடினார். ஆனால், மறுமுனையில் ரூதர்போர்டு 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.




இதையடுத்து, அணியை சரிவில் இருந்து மீட்க ஷாபாசுடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 13.3 ஓவர்களில் 100 ரன்களை பெங்களூர் அணி கடந்தது. அஸ்வின் வீசிய 14வது ஓவரில் தினேஷ் கார்த்திக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். சைனி மற்றும் பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்தடுத்த ஓவர்களிலும் தினேஷ்கார்த்திக்கும், ஷபாஸ் அகமதுவும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினர்.


கடைசி 18 பந்தில் 28 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரெண்ட் போல்ட் வீசிய 18வது ஓவரில் ஷாபாஸ் அகமது பவுண்டரி, சிக்ஸர் விளாசி பதற்றத்தை தணித்தார். ஆனாலும், ஷாபாஸ் 26 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ப்ரசித் கிருஷ்ணா வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை பெங்களூர் பக்கம் தினேஷ் கார்த்திக் கொண்டு வந்தார்.




கடைசியில் 6 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெய்ஷ்வால் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலே ஹர்ஷல் படேல் சிக்ஸர் அடித்து பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களுடனும், ஹர்ஷல் படேல் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண