ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. 


இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நடப்பு தொடருக்கு பின் விலக உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இத்தனை ஆண்டுகள் ஆர்சிபி அணியின் கேப்டனாக பல திறமையான வீரர்களை வழி நடத்தி சென்றுள்ளேன். இத்தனை நாட்கள் எனக்கு உறுதுணையாக இருந்த ஆர்சிபி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். இந்த முடிவு எடுக்க சற்று கடினமாக தான் இருந்தது. எனினும் அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். எனினும் நான் முன்பாக கூறியது போல் எப்போதும் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன். என்னுடைய ஓய்வு வரை ஆர்சிபி அணிக்கு மட்டுமே விளையாடுவேன் " எனக் கூறியுள்ளார். 


 






முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து உலகக் கோப்பையுடன் விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் தற்போது ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் இந்தத் தொடர் உடன் விலகும் அறிவிப்பை அறிவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி 2013ஆம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பு ஏற்றார். 8 சீசனாக கேப்டனாக உள்ள கோலி தற்போது வரை 132 போட்டிகளில் 60 வெற்றி மற்றும் 64 தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதல் ஒரே அணிக்காக விளையாடும் வீரர் விராட் கோலி தான். அவர் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடியுள்ளார். 


மேலும் படிக்க: யாரு சாமி நீ.? யுஏஇயில் தொடர்ந்து ருத்ர தாண்டவம் ஆடும் ருதுராஜ்.. கடந்து வந்த பாதை!