ஐ.பி.எல். தொடரின் 39வது ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் 6-வது இடத்தில் மும்பை அணியும் மோதின. துபாய் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுரு 165 ரன்கள் எடுத்தது.
இலக்கை சேஸ் செய்த மும்பை அணிக்கு, ரோஹித், டி-காக் சிறப்பான ஓப்பனிங் கொடுத்தனர். ஆனால், அவர்களை அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்கில் ரன்களை எட்டாமல் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 79/2 என்ற நிலையில் இருந்து 111/10 என்ற நிலையை எட்டியது மும்பை. 32 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து சட்டென்று சரிந்தது மும்பை அணி.
பெங்களூரு அணி பவுலர்களைப் பொருத்தவரை, ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும், சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர். ஆர்சிபியின் சிறப்பான பவுலிங் பர்ஃபாமென்ஸ், மும்பையை அணி பேட்டர்களை திக்குமுக்காட வைத்தது.
ஹர்ஷல் வீசிய 17வது ஓவரில், ஹர்டிக் பாண்டியா, பொல்லார்டு, ராகுல் சஹார் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்து இந்த சீசனின் முதல் ஹாட் - ட்ரிக்கை பதிவு செய்தார். மடமடவென சரிந்த மும்பை அணியின் விக்கெட்டுகளால் ஸ்கோர் 111-ஐ தாண்டவில்லை. 18.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது மும்பை அணி. இதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனின் பெங்களூரு - மும்பை அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியுள்ள பெங்களூரு அணி, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 12 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும், 8 புள்ளிகளுடன் மும்பை ஏழாவது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா, சென்னை, பெங்களூரு என இந்த சீசனின் இரண்டாம் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க மீதமிருக்கும் போட்டிகளில் கண்டிப்பான வெற்றிகளை நோக்கி களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.