2021 ஐபிஎல் தொடரில் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணி மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சென்னை அணி முதலில் தொடர்ச்சியாக விக்கெட் இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் அடித்தது.
157 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் 17 ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்துவீச்சில் எல்டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது நடுவர் அவுட் அளிக்கவில்லை. அந்த சமயத்தில் சிஎஸ்கே கேப்டன் ரிவ்யூ கேட்டு முக்கியமான டி காக் விக்கெட் விழ முக்கிய காரணமாக அமைந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அன்மோல்பிரீத் 16 ரன்களுடன் தீபக் சாஹர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி அவுட் ஆகினார். பின்பு சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுடன் ஷர்தல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்ப்ளேவில் 3 விக்கெட் இழந்து 41 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து இஷான் கிஷன் மற்றும் சவுரப் திவாரி சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் பிராவோவின் பந்துவீச்சில் இஷான் கிஷன் 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு மற்றும் திவாரி ஆகிய இருவரும் மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 13 ஓவர்களில் மும்பை அணி 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் 15 ரன்களில் பொல்லார்டு ஹேசல்வூட் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வந்த குரூணால் பாண்ட்யா 4 ரன்களுடம் ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 17 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 108 ரன்கள் எடுத்து இருந்தது.
மேலும் படிக்க: யாரு சாமி நீ.? யுஏஇயில் தொடர்ந்து ருத்ர தாண்டவம் ஆடும் ருதுராஜ்.. கடந்து வந்த பாதை!