ஐ.பி.எல். 2021ம் தொடரின் 45வது ஆட்டம் இன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்கும் இனி வரும் ஆட்டங்கள் வாழ்வா? சாவா? என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 19 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.


பஞ்சாப் vs கொல்கத்தா :


இரு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் இதற்கு முன்பு 1 போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் 6 போட்டியிலும், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 2வதாக பேட்டிங் செய்து 4 போட்டியிலும், கொல்கத்தா அணி சேசிங் செய்து 13 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.




இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 2018ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 214 ரன்களை குவித்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக, அதே போட்டியில் பஞ்சாப் அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 245 ரன்களை குவித்ததே பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 2014ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 109 ரன்களை எடுத்ததே அந்த அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும். கொல்கத்தா அணிக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோராக பஞ்சாப் அணி 2011ம் ஆண்டு 119 ரன்களை எடுத்துள்ளது.


அதிக ரன்கள், விக்கெட்டுகள் : 


கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக பஞ்சாப் அணி சார்பில் விருத்திமான் சஹா 115 ரன்களை குவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி சார்பில் மணீஷ் பாண்டே 94 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தாவிற்கு எதிராக பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வேல் 262 ரன்களை எடுத்துள்ளார். கொல்கத்தா அணி சார்பில் பஞ்சாப் அணிக்கு எதிராக கவுதம் கம்பீர் 492 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் சார்பில் பியூஷ் சாவ்லா 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




கொல்கத்தா அணி சார்பில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிகபட்சமாக சுனில் நரைன் 30 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாக பஞ்சாப் அணி சார்பில் சந்தீப்சர்மா 25 ரன்களை விட்டுக்கொடுத்த 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  கொல்கத்தா அணி சார்பில் சிறந்த பந்துவீச்சாக சுனில்நரைன் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.