பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 262 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐபிஎல் சீசன் 17. அந்தவகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் 41 போட்டிகள் முடிந்துள்ளன. இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 42 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
கொல்கத்தா அணியின் அதிரடி பேட்டிங்:
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கர்ரன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலில் சால்ட் மற்றும் சுனில் நரேன்சுனில் நரைன் களம் இறங்கினார்கள். வழக்கம் போல் இவர்களது ஜோடி அதிரடியான தொடக்கத்தை பவர்ப்ளேயில் பெற்றுக்கொடுத்தது.
இருவரும் தங்களது வெறித்தனமான பேட்டிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெளிப்படுத்தினர். இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.
அதன்படி இவர்களது பார்ட்னர்ஷிப் 138 ரன்களை குவித்தது. 10.2 வது ஓவரில் தான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதல் விக்கெட்டையே இழந்தது. 32 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 71 ரன்களை குவித்தார். மறுபுறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார் பிலிப் சால்ட். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தார் வெங்கடேஸ் அய்யர். 163 ரன்கள் எடுத்த போது இரண்டாவது விக்கெட்டை இழந்தது கொல்கத்தா.
262 ரன்கள் இலக்கு:
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிலிப் சால்ட் சாம் கரன் பந்தில் விக்கெட்டானார். மொத்தம் 37 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 75 ரன்களை குவித்தார்.
இதனிடையே வெங்கடேஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார் ஆண்ட்ரே ரஸ்ஸல். இவர்களும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 203 ரன்கள் எடுத்த போது கொல்கத்தா அணி 3 வது விக்கெட்டை இழந்தது. அந்தவகையில் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 24 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவின்படி 6 விக்கெட்டுகளுக்கு 261 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி. பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.