ஐ.பி.எல். கிரிகெட் போட்டிகளில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சென்னை அணி தோல்வியுடன் தன் பயணத்தைத் தொடங்குவது வழக்கம். அடுத்த போட்டிகளில் தனது மிரட்டல் ஆட்டத்தைக் காட்டும். ஆனால், இந்தாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து நான்கு போட்டிகளும் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இன்றைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா என்பது சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில், சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், சி.எஸ்.கே. அணி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்தாண்டு அணியின் கேட்பன் பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா பல போட்டிகளில் சரியான நேரத்தில் தன் திறமையான ஆட்டத்தால், அணிக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறார். ஆனால், கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, சென்னை அணி இன்னும் வெற்றியை பதிவு செய்யவில்லை. அப்படியிருக்க, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜாவுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி மற்றும் செயல்பாடுகள் குறித்து பிரபல கிரிக்கெட் ஊடகத்தில் பேசியுள்ளார்.
அதில், சேவாக், “ஜடேஜாவுக்கு எனது அறிவுரை என்னவென்றால், தோல்வி அடைந்தால், அது தொடர்பான விமர்சனங்கள் எழுவது வழக்கமானது. அவைகளுக்குச் செவி சாய்க்க வேண்டாம். அப்படி, விமர்சனங்களை கவனிக்க தொடங்கினால், களத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் . ஏனென்றால், நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது, அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்? ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? அணியினர் என்ன நினைப்பார்கள்?' என்று யோசித்தால் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியாது. மிக தெளிவாக உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும், ஜடேஜாவுக்கு தன் அறிவுரையாக, சென்னை அணியினை பற்றி செய்திகளில் என்ன வருகிறது என்பதையெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள கவனம் செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
“உங்கள் ஃபோனை ஏரோ ப்ளைன் மோட்- இல் வைக்கவும். எப்படியும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் யாரும் பெரிதாக செய்திகளை வழங்குவதில்லை. டி.வி. பார்ப்பதை தவிருங்கள். சென்னை அணியை பற்றி செய்திகள் என்ன சொல்கிறார்கள் என செய்தித்தாள்கள், டி.வி. செய்திகளில் பார்க்கவோ, படிக்கவோ வேண்டாம். அவற்றை எல்லம் கவனித்தால் உங்கள் மனம் மோசமாகிவிடும். சமூக வலைதளங்களில் சி.எஸ்.கே. பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லம் பற்றி கவலை பட வேண்டாம்.” என்று ஜடேஜாவை கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
மேலும், ஜடேஜாவுக்கு, தனது நண்பர்கள், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை உதாரணம் காட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் கடினமான காலங்களில் தங்கள் மொபைல் போன், டிவி அல்லது செய்தித்தாள்களைப் பார்க்க மாட்டார்கள் என்றும், இதையே ஜடேஜாவும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜடேஜா நன்றாக பயிற்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ரிலாக்ஸாக வீடியோ கேம்களை விளையாடி, ஜாலியாக இருக்க வேண்டும் என்று சேவாக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்