நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமயிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.  குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு அறிமுகமானதோடு முதல் சீசனிலேயே கோப்பையையும்  வென்ற குஜராத் அணி, இதுவரை ராஜஸ்தான் அணியுடன் மூன்று முறை விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியின் மூலம், தொடர் தோல்விகளுக்கு ராஜஸ்தான் அணி குஜராத் அணியை பழிதீர்க்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு தொடரில் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் தலா 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலிடத்திலும், குஜராத் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க குஜராத் அணியும், முதலிடத்தில் தொடர ரஜஸ்ட்க்ஹான் அணியும்  முயற்சி செய்யும் என கூறலாம். 


குறிப்பாக ராஜஸ்தான் அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வீழ்த்தியுள்ளதால், அது ராஜஸ்தான் அணிக்கு பெரும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். 


அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது கடைசி போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் இந்த மைதானத்தில் குஜராத் அணி கொல்கத்தாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.