ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 


டாஸ் வென்ற லக்னோ:


இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 51வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில், குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கில் க்ருணால் பாண்ட்யா தலைமையில் லக்னோ அணி களமிறங்குகிறது. அதேநேரம், கேப்டன் ராகுல் இல்லாமல் களமிறங்குவது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


பேட்டிங்கில் அதகளம்:


குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் விரிதிமான் சாஹா ஆகியோர் அதிரடியாக விளையாடி அதிவேகமாக ரன் குவித்தது. அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய இந்த கூட்டணியை முறியடிக்க முடியாமல் லக்னோ அணி விழிபிதுங்கியது. 7 பவுலர்களை பயன்படுத்தியும் லக்னோ அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது. விரிதிமான் சாஹா வெறும் 20 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்ய, மறுமுனையில் சற்றே நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 81 ரன்கள் சேர்த்து இருந்தபோது சாஹா ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். முதல் விக்கெட்டிற்கு கில் - சாஹா கூட்ட்ணி 142 ரன்களை குவித்து அசத்தியது.


சுப்மன் கில் அதிரடி:


இதையடுத்து, கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து சுப்மன் கில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த கூட்டணி சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசியது. மறுமுனையில் சிறிதுநேரம் அதிரடி காட்டிய கேப்டன் பாண்ட்யா, 15 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால், அவரை தொடர்ந்து வந்த மில்லர், தனது பங்கிற்கு விரைவாக ரன் சேர்த்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 94 ரன்களை சேர்த்தார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும்.


குஜராத் அணிக்கு இலக்கு:


இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை சேர்த்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக மொஹ்சின் கான் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலார் ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து, குஜராத் அணி நிர்ணயித்த 228 ரன்கள் என்ற இலக்கை, அவர்களின் வலுவான பந்துவீச்சை சமாளித்து  லக்னோ எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.