15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று புனேவில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. 


அதன் அடிப்படையில், சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் உத்தப்பா களமிறங்கினர். போட்டியின் தொடக்கத்தில் உத்தப்பா 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, பின்னால் வந்த மொயின் அலியும் ஜோசப் வீசிய 6 வது ஓவரில் 1 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார். 


அதன் பிறகு ருதுராஜ் உடன் இணைந்த ராயுடு அதிரடிக்காட்ட, பார்ம் அவுட்டில் இருந்த ருதுராஜும் ரன் வேட்டையை தொடங்கினார். ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து இருவரும் சரவெடியாய் வெடிக்க, சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென்று உயர்ந்தது. 






சிறப்பாக ஆடிய ருதுராஜ் 37 பந்துகளில் 50 ரன்களை கடந்து, நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். மறுபுறம் அடித்து ஆடிய ராயுடு அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜோசப் வீசிய 15 வது ஓவரில் 46 ரன்களில் அவுட் ஆனார். 


மேலும் அதிரடியாக விளையாடி வந்த ருதுராஜ், யஷ் டாயல் வீசிய 17 வது ஓவரில் அடித்து ஆட முயற்சி செய்து 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  நன்றாக உயர்ந்து வந்த சென்னை அணியின் ஸ்கோர் பின்னால் வந்த வீரர்கள் சொதப்ப, ரன் எடுக்க தடுமாறியது. 


19 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி ஓவரில் சிவம் துபே கொடுத்த கேட்சை மனோகர் தவறவிட, அது நான்கு ரன்களை பெற்றது. தொடர்ந்து, ஜடேஜாவும் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்களை பறக்கவிட, கடைசி ஓவர் கடைசி பந்தில் துபே ரன் அவுட் ஆனார். இறுதியில், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் அடித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண